பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்திலுள்ள முக்கியமானவர்கள். கல்முனை பகுதியில் போதைப் பொருள் பாவனை பரவல் அதிகரித்திருக்கின்றது. எதிர்காலத்தில் பல சுற்றிவளைப்புகள் இப்பகுதியில் இடம்பெறும். இதில் எதிர்பாராத முறையில் பலரும் பிரச்சினைக்கு உள்ளாவார்கள். அவர்கள் தொடர்பாக அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. இத்தகவல்களைக் கொண்டு இப்பிராந்தியத்திலுள்ள பொலிஸார் உட்பட மற்றவர்களைப் பயன்படுத்தாது வெளிப் பிராந்தியத்திலிருந்து வருகின்றவர்களைக் கொண்டு இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, கல்முனைப் பகுதியில் போதைப் பொருள் பாவனை பரவல் அதிகரித்திருக்கின்றது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்காக விழிப்பூட்டல்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.
அதனைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களே அதற்கு உதவியாக இருக்கின்றார்கள் என்பதை இவ்விடத்தில் முக்கியமாகக்கூற விரும்புகின்றேன். கட்டுப்படுத்த வேண்டியவர்களே அதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். அவர்கள் தங்களுக்குரிய பங்கையும் இலஞ்சத்தையும் பெற்றுக் கொண்டு கடமையை நிறைவேற்றாது இருக்கின்றார்கள்.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்திலுள்ள முக்கியமானவர்கள் எனவும் கூறப்படுகின்றது. இவர்களுக்கெதிராக உரிய துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருக்கின்றனர். இன்று சமூக மட்டத்தில் படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
சமய, சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள் எல்லோருக்கும் இது பிரச்சினையாக வந்து விட்டது. இப்பிரச்சினையை ஒவ்வொரு பெற்றோர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்காலத்தில் பல சுற்றிவளைப்புகள் இப்பகுதியில் இடம்பெறும். இதில் எதிர்பாராத முறையில் பலரும் பிரச்சினைக்கு உள்ளாவார்கள். அவர்கள் தொடர்பாக அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன.
இத்தகவல்களைக் கொண்டு இப்பிராந்தியத்திலுள்ள பொலிஸார் உட்பட மற்றவர்களைப் பயன்படுத்தாது வெளிப் பிராந்தியத்திலிருந்து வருகின்றவர்களைக் கொண்டு இச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் எனக்கூறினார்.
No comments:
Post a Comment