பதவி விலக தயாராகவே உள்ளேன் : சந்திரிக்கா சுதந்திர கட்சி உறுப்பினராகவே உள்ளார் : கட்சி உருவாக்கும் அதிகாரம் குமார வெல்கமவிற்கு கிடையாது - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

பதவி விலக தயாராகவே உள்ளேன் : சந்திரிக்கா சுதந்திர கட்சி உறுப்பினராகவே உள்ளார் : கட்சி உருவாக்கும் அதிகாரம் குமார வெல்கமவிற்கு கிடையாது

(இராஜதுரை ஹஷான்)

பத்திக் கைத்தரி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினை இராஜினாமா செய்யுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் கட்சியின் செயற்குழு வலியுறுத்தினால் நிச்சயம் பதவி விலகுவேன். பதவி விலக தயார் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம புதிதாக உருவாக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்ட அரசியல் கட்சி குறித்து தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுடன் இன்று பேச்சுவார்தையினை முன்னெடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெயரையோ அல்லது சுதந்திர கட்சியின் பெயரை ஒத்த பெயரையோ பயன்படுத்தி அரசியல் கட்சியை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கிடையாது. இவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இவர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு பாராளுமன்றிற்கு தெரிவானார். இவர் தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு சார்பாகவே செயற்படுகிறார். சுதந்திர கட்சின் அடிமட்ட உறுப்பினர்களை அரசியல் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக குறிப்பிடுகிறார். 

இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளோம். இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கேள்வி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சுதந்திர கட்சியுடன் இணைத்துக் கொள்வது குறித்து கட்சி கவனம் செலுத்தியுள்ளதா ?

பதில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்பட்டது. இன்றும் அவர் கட்சியின் உறுப்பினராகவே உள்ளார். எதிர்காலத்தில் அவரையும் ஒன்றினைத்து அரசியல் ரீதியில் முன்னேற்றமடைய திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயம் குறித்து கட்சி மட்டத்தில் உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா ?

பதில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பங்காளி கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றதை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளோம். இதனை மறைக்க வேண்டிய தேவை கிடையாது, சுதந்திர கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள், கட்சியின் ஒருங்கினைப்பாளர்கள் ஆளும் தரப்பினரினால் புறக்கணிக்கப்படுகின்றமை அவதானத்திற்குரியது.

கேள்வி பத்திக் கைத்தரி மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு நகைச்சுவையான அமைச்சு என்று குறிப்பிட்ட பின்னர் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு அழுத்தம் பிரயோகிக்கிறார்கள். இராஜாங்க அமைச்சு பதவியை துறக்க தயாரா?

பதில் நிலவை பார்த்து நாய் குரைப்பதால் நிலவு தரையில் விழுந்து விடாது. இராஜாங்க அமைச்சு பதவியை துறக்க தயாராகவே உள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவியை துறக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும் சுதந்திர கட்சியின் செயற்குழு வலியுறுத்தினால் நிச்சயம் பதவி விலகுவேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad