எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மையை கருத்திற் கொண்டே அரசாங்கம் செயற்படும் - தாரக பாலசூரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மையை கருத்திற் கொண்டே அரசாங்கம் செயற்படும் - தாரக பாலசூரிய

(நா.தனுஜா)

இலங்கையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாப்பதையும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதையும் மையப்படுத்தியே நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில், சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களின் நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நாம் சீனாவுடனான நட்புறவுக் கொள்கையைப் பேணும்போது அதற்கெதிராக மனித உரிமைகள் நிலைவரம், சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் நாட்டின் இறையாண்மை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் செயற்படும் என்று பிராந்திய விவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தமிழர்களின் குழுக்கள் (டயஸ்போரா) சர்வதேச நாடுகளில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. எனவே சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை குறித்த தவறான தோற்றப்பாடொன்றை உருவாக்கும் வகையிலான செயற்பாடுகள் புலம்பெயர் தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையினால் பின்பற்றப்படும் வெளிவிவகாரக் கொள்கைகள், பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கேள்வி நாடொன்றின் வெளிவிவகாரக் கொள்கையானது அந்நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?

பதில் உள்நாட்டுக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே வெளிநாட்டுக் கொள்கைகள் அமையும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அதற்கேற்றவாறுதான் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைகளும் அமைந்துள்ளன. 

அதுமாத்திரமன்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சுபீட்சத்திற்கான நோக்கு' என்ற கொள்கையின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கும் இலக்குகளையும் எமது வெளிநாட்டுக் கொள்கை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் தொடக்கம் மிகச்சிறிய நாடுகளும் வெளிவிவகாரக் கொள்கையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமானதாகும்.

கேள்வி சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை முறியடிக்கக் கூடிய வகையிலான எந்தெந்த அடிப்படைகளில் எமது நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது?

பதில் பொதுவாக வெளிவிவகாரக் கொள்கை என்பது அரசியல் இராஜதந்திரக் கொள்கைகளை மையப்படுத்தியதாக உருவாக்கப்படுவது வழமையாகும். எனினும் அபிவிருத்தியடைந்த நாடுகளான நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பொருளாதார இராஜதந்திரக் கொள்கைகளை மையப்படுத்தியதாகவே அவற்றின் வெளிவிவகாரக் கொள்கையைக் கட்டமைத்திருக்கின்றன. 

அந்நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள் வர்த்தகத்துறை மற்றும் முதலீடுகளுடன் தொடர்புடைய அமைச்சுக்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருக்கும். அந்த வகையில் பிராந்திய ரீதியான வர்த்தக உறவுகளையும் வாய்ப்புக்களையும் மேம்படுத்திக் கொள்ளும் விதத்திலேயே இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகக் கூடிய பிராந்தியமாக ஆசியப் பிராந்தியம் இனங்காணப்பட்டுள்ளது. எனவே நாமும் அதில் தீவிர கவனம் செலுத்துவதுடன் இந்தியா, சீனா, பங்களாதேஷ் போன்ற பிராந்திய நாடுகளுடன் நெருக்கமான வர்த்தகத் தொடர்புகளைப் பேணுவதன் ஊடாகவே பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்ள முடியும். பிராந்திய ரீதியான கொள்கைகளில் இவ்வனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளளன.

கேள்வி அண்மைக் காலத்தில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமெரிக்க காங்கிரஸில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடத்தக்களவான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை சீரான மட்டத்தில் எவ்வாறு பேண முடியும்?

பதில் முதலில் எமது நாட்டிற்கு சர்வதேச சமூகத்தின் மத்தியிலிருந்து எத்தகைய சவால்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் நன்கு புரிந்து கொள்வது அவசியமாகும். சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் அவற்றினால் விதிக்கப்படும் நிபந்தனைகளின் நோக்கம் என்னவென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 

உதாரணத்திற்கு நாம் சீனாவுடனான நட்புறவுக் கொள்கையைப் பேணும்போது அதற்கெதிராக மனித உரிமைகள் நிலைவரம், சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம். மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடடைந்த நாடுகளாகக் கருதப்படும் சுவீடன், நியூஸிலாந்து போன்ற நாடுகள் இனிவருங்காலங்களில் அதில் முன்னேற்றமடையத் தேவையில்லை என்று கூற முடியாது. 

மனித உரிமைகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேசும் அமெரிக்காவில் கூட அண்மையில் கறுப்பினத்தவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. எனவே அனைத்து நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. ஆகவே இவ்வாறான அழுத்தங்களின் நோக்கம் தொடர்பில் ஆராய வேண்டும். 

அதேவேளை உள்நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பேணக் கூடியதாகவே வெளிநாட்டுக் கொள்கைகள் அமைய வேண்டும். ஒருபோதும் சர்வதேச சமூகத்திலிருந்து விலகி, தனித்துச் செயற்பட முடியாது. எனவே ஏனைய சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து, வெளிவிவகாரங்களில் ஓர் சமநிலையைப் பேண வேண்டும்.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கொண்டிருக்கின்றார். அதேவேளை கடந்த அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. 

மேலும் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வு விடயத்திலும் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்பட வேண்டும். இவ்விவகாரங்களில் சர்வதேச சமூகம் பல்வேறு கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்கக் கூடும். 

எனினும் அரசாங்கமானது மக்களின் அபிலாஷைகளையும் நாட்டின் சுயாதீனத்தன்மை மற்றும் இறையாண்மை ஆகியவற்றையும் கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்புத் தயாரிக்கப்படுமானால், அதில் நாட்டின் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான சரத்துக்களை உள்ளடக்குவதன் மூலம் ஓரளவிற்கு சர்வதேசத்தின் தலையீடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment