அரசாங்கம் உரிய காலப்பகுதியில் கடன் தொகைகளை முறையாகச் செலுத்தும், எதிர்க்கட்சிகள் எவ்விதமான காரணங்களைக் கூறி பிரசாரம் செய்யப் போகின்றன? - அஜித் நிவாட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

அரசாங்கம் உரிய காலப்பகுதியில் கடன் தொகைகளை முறையாகச் செலுத்தும், எதிர்க்கட்சிகள் எவ்விதமான காரணங்களைக் கூறி பிரசாரம் செய்யப் போகின்றன? - அஜித் நிவாட் கப்ரால்

(ஆர்.ராம்)

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதில் எவ்விதமான சிக்கல்களும் இல்லை என்று நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

அடுத்து வரும் காலப்பகுதியில் ஒரு பில்லியன் வரையிலான வெளிநாட்டுக் கடன்கள் செலுத்தப்படவுள்ளதாகவும், அரசாங்கம் மிக மோசமாக பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருப்பதால் அக்கடன்களை செலுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியைப் பொறுப்பேற்று ஆட்சி அமைத்தவுடன் அரசாங்கத்தினால் நிலுவையில் உள்ள கடன் தொகையில் 2020ஆம் ஆண்டுக்கான தொகையை மீளச் செலுத்த முடியாது என்று பிரசாரம் செய்தன. ஆனால் அவ்விதமான எந்த நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கவில்லை. அரசாங்கம் உரிய காலப்பகுதியில் அக்கடன் தொகைகளை செலுத்தியிருந்தன. 

தற்போது, நாணயத் தாள்களை அச்சிட்டதன் காரணத்தினால் இந்த ஆண்டின் அடுத்து வரும் காலப்பகுதியில் உள்ள கடன் தொகைகளை செலுத்த முடியாது என்று பிரசாரம் செய்கின்றன. ஆனால் அவ்விதமான நெருக்கடியான நிலைமைகள் எவையும் காணப்படவில்லை. 

கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும் நிதி முகாமைத்துவம் முறையாகவே பேணப்பட்டது. அதேபோன்று, தற்போதும் அந்தச் செயற்பாடுகள் அனைத்தும் முறையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, அரசாங்கம் உரிய காலப்பகுதியில் கடன் தொகைகளை முறையாகச் செலுத்தும். அப்போது எதிர்க்கட்சிகள் எவ்விதமான காரணங்களைக் கூறி பிரசாரம் செய்யப் போகின்றன? என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad