தடுப்பூசி வழங்கல் முன்னுரிமைப் பட்டியலில் வர்த்தகர்கள் உள்வாங்கப்பட வேண்டும் - சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

தடுப்பூசி வழங்கல் முன்னுரிமைப் பட்டியலில் வர்த்தகர்கள் உள்வாங்கப்பட வேண்டும் - சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் கோரிக்கை

நூருல் ஹுதா உமர்

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது வர்த்தகர்களுக்கும், வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் பருவ காலத்தில் வர்த்தக நிலையங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் கலந்துரையாடல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அல்-அமீன் ரிசார்ட் தலைமையில், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதற்கான கடிதமும் ஒப்படைக்கப்பட்டது. 

இதில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம்.எம். முபாரக், செயலாளர் எம்.எப்.ஏ. பாஸித், பொருளாளர் எம்.எம்.ஏ. ரஹீம் உள்ளிட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்துகொண்டனர். 

அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாைனது, எதிர்வரும் வாரங்களில் எமது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவுக்குள் கொரோணா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அறியமுடிகின்றது.

அதிலும் குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களை முன்னரங்க பணியாளர்களாக (Frontline Workers) கருதி அவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது. 

 இங்கு, வர்த்தகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பொருட்கள் கொள்வனவு செய்பவர்களாகவும், வர்த்தக நிலையங்களில் வெளிநாட்டு மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த உள்நாட்டு வாடிக்கையாளர்களுடன் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களும் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களும் தினமும் கொரோணா அச்சுறுத்தலை எதிர்நோக்கியவர்களாகவே உள்ளனர். 

எனவே, இவர்களையும் முன்னரங்க பணியாளர்களாக (Frontline Workers) கருதி தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்குமாறு சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் தங்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad