உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானம் நாளை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானம் நாளை

(எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்மானம் நாளை இடம்பெறும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தவார பாராளுமன்ற அமர்வு தொடர்பாக தீர்மானிக்கும் பாராளுமன்ற விவகாரம் தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

இதன்போது இந்த வாரம் பாராளுமன்ற அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள இருக்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்படுவதுடன் பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்படும்.

குறிப்பாக மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சபாநாயகரி்டம் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாகவும் நாளையதினம் தீர்மானிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டபோது, விலை அதிகரிப்பு மேற்கொண்டமைக்கு மின் சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விலை அதிகரிப்பை பொதுஜன பெரமுன ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதனால் அவர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக செயற்பட்டு எரிபொருட்களின் விலை அதிகரிப்பை மேற்கொண்டிருக்கின்றார். அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையல்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர தீர்மானித்து.

கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 23ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்படுள்ளது. அதன் பிரகாரம் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்ட திகதியில் இருந்து 5 நாட்களுக்கு பின்னர், நிலையியற் கட்டளையின் பிரகாரம் எந்தவொரு தினத்திலும் அதனை விவாத்தக்கு எடுத்துக் கொள்ள முடியுமாகின்றது.

அதன் பிரகாரம் நாளை கூடும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment