(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைத்து வெளியிட்டுள்ளமை ஆச்சரியமடையும் விடயமல்ல. அனைத்தும் எதிர்பார்த்ததே. நல்லாட்சி அரசாங்கத்திலும் சுதந்திர கட்சியினர் இவ்வாறே செயற்பட்டார்கள் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நகைச்சுவையான இராஜாங்க அமைச்சுக்களை அவர்களுக்கு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவிகள் வழங்கி ஒரு வருடம் பூர்த்தியாகுகின்றன. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கிலேயே தேசிய கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
பலவீனமாக அமைச்சுக்களையும், பலப்படுத்தும் பொறுப்பு அமைச்சர்களுக்கு உண்டு. செயற்திறனுடன் செயற்படுவதை விடுத்து அமைச்சு பதவிகளை குறைகூறுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறே செயற்பட்டார்கள்.
சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்கு எதிராக வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் ஆச்சரியமடைய தேவையில்லை. அனைத்தும் எதிர்பார்த்ததே. அவரது கருத்துக்கு பின்ணியில் யார் உள்ளார் என்பதே அறியப்பட வேண்டும்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அதனை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள். 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி இம்முறை வெற்றி பெறாது. பொதுஜன பெரமுனவிற்கு தனித்து அரசாங்கத்தை அமைக்கும் பலம் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment