அரச ஊழியர்கள் சகலரையும் பணிக்கு அழைத்துள்ளமையை ஏற்க முடியாது : சுற்று நிரூபத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும் என்கிறது அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 31, 2021

அரச ஊழியர்கள் சகலரையும் பணிக்கு அழைத்துள்ளமையை ஏற்க முடியாது : சுற்று நிரூபத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் போராட்டம் வெடிக்கும் என்கிறது அரச தாதியர் அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

அரச ஊழியர்கள் சகலரையும் பணிக்கு அழைத்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பில் வெளியிடப்படவுள்ள சுற்று நிரூபத்தில் சுகாதார ஊழியர்கள் உள்ளடக்கப்படக் கூடாது. மாறாக அவர்களையும் உள்ளடக்கிய புதிய சுற்று நிரூபத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் சகல சுகாதார ஊழியர்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்று அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சகல அரச உத்தியோகத்தர்களும் திங்கட்கிழமை முதல் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார். அதற்கமைய இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சகல சுற்று நிரூபங்களும் இரத்து செய்யப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென இவ்வாறான சுற்று நிரூபம் வெளியிடப்படுவதற்கான காரணம் என்ன? கொவிட் நிலைமை தீவிரமடைந்த காலப்பகுதியிலேயே இந்த குறித்த சுற்று நிரூபங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அவ்வாறெனில் தற்போது கொவிட் நிலைமை சீராகியுள்ளதா? நிலைமை சரியாகாமல் எதற்காக சகல அரச ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்படுகின்றனர் ? இதனால் அரச ஊழியர்கள் கொத்தணி உருவாகினால் அதற்கு பி.பி. ஜயசுந்திர பொறுப்பு கூறுவாரா?

தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. இவ்வாறான நிலையில் சுகாதார ஊழியர்களும் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளது.

பேராதனை வைத்தியசாலையில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த 37 ஊழியர்களுக்கு ஒரே நாளில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டி, கராப்பிட்டிய, தேசிய வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் பாரதூரமான வகையில் கொவிட் வைரஸ் பரவியுள்ளது.

எனவே வெளியிடப்படவுள்ள புதிய சுற்று நிரூபத்தை சுகாதார ஊழியர்களையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டாம். நூறுவீதம் பணிக்கு சமுகமளிக்கா விட்டாலும் வழமையான கடமைகள் இடம்பெற்றன.

எனவே புதிய சுற்று நிரூபத்தை சுகாதார ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்த எத்தனித்தால் சகல சுகாதார ஊழியர்களையும் ஒன்றிணைந்து நிச்சயம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment