பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்றனர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தவர்கள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்றனர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாம் ஆட்சியை பொறுப்பேற்று ஓராண்டுக்குள் பல தடைகளுக்கு முகங்கொடுத்தோம். கடந்த அரசாங்கத்தினால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை எவ்வாறு மீள கட்டியெழுப்புவது என்பது முதலாவது தடை, அதுவே, ஜனாதிபதி, பிரதமர், எமது அரசாங்கத்திற்கு இருந்த முதலாவது சவால் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

445 மில்லியன் ரூபாய் மற்றும் 127 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்ற நுழைவாயில் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் முன்னால் சுரங்க வழி பாதசாரிகள் கடவை, 4999 மில்லியன் ரூபாய் செலவில் கோட்டை லோட்டஸ் வீதியில் 17 மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் 'கடல்சார் வசதி மையத்தின்' நிர்மாணப் பணிகளை நேற்றுமுன்தினம் (02) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். 

இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு அரசாங்கத்தை ஒப்படைக்கும் போது நாம் சீன பொருளாதார வளர்ச்சி வேகத்தில் மாத்திரமே இரண்டாம் நிலையில் இருந்தோம். மிகவும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரமொன்றையே அவர்கள் எமக்கு ஒப்படைத்தனர்.

அவ்வாறு பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்தவர்கள் இன்று எமது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கத்திற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

முழு உலகிற்கும் சவாலாகவுள்ள இந்த கொரோனா வைரஸே இரண்டாவது சவாலாகும். இவ்வனைத்து சவால்களையும் நாம் எதிர்கொண்டோம். இன்றும் அதற்கு முகங்கொடுத்து வருகின்றோம். அவ்வாறு முகங்கொடுத்த வண்ணமே நாம் பாரிய அபிவிருத்தி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். 

கொரோனாவை காரணம் காட்டி அரச துறையில் உள்ளவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது எனவோ, கடன்களை மீள செலுத்த முடியாது என்றோ நாம் கூறவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வழியில்லை. மிகக் கடினமாகவே கடந்து செல்கிறோம் என நாம் ஒருபோதும் கூறவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எமது அரசாங்கம் மிகவும் திறமையான வகையில் திட்டமிட்டு அதற்கு முகங்கொடுத்தோம். இதுதான் யதார்த்தம்.

ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என நாம் தேர்தலின் போது வாக்குறுதியளித்தோம். அதனை அவ்வாறே செயற்படுத்திய அரசாங்கமே தற்போது உள்ளது. அதனை அவ்வாறே செயற்படுத்திய ஜனாதிபதியும், பிரதமரும் எமக்கு உள்ளனர். இதுதான் உண்மை. ஆனால் இந்த உண்மையை வெளிப்படுத்தாது மூடி மறைக்க முயல்கின்றனர்.

No comments:

Post a Comment