தரம் 5 புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் ஒக்டோபரில் ?, O/L ஜனவரியில் : பரீட்சையை நடாத்துவதில் மாணவர்களிடையே இரு கருத்துகள் : கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று தடுப்பூசி - News View

About Us

About Us

Breaking

Friday, July 9, 2021

தரம் 5 புலமைப்பரிசில், A/L பரீட்சைகள் ஒக்டோபரில் ?, O/L ஜனவரியில் : பரீட்சையை நடாத்துவதில் மாணவர்களிடையே இரு கருத்துகள் : கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இன்று தடுப்பூசி

கொவிட் தொற்று காரணமாக இவ்வருடமும் பரீட்சைத் தினங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் வருடாந்தம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இவ்வருடமும் ஒத்தி வைக்கப்பட்டு, எதிர்வரும் ஒக்டோபரில் நடாத்த, கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அதற்கமைய, புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் க.பொ.த. உயர் தர பரீட்சைகள் ஒக்டோபர் 04ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அத்துடன், 2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை அடுத்த வருடம் ஜனவரி பிற்பகுதியில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, க.பொ.த. உயர் தரப் பரீட்சை திகதிகள் குறித்து மாணவர்களிடையே இரண்டு கருத்துகள் நிலவுவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திட்டத்திற்கு அமைய, முதற் கட்டமாக, பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று (09) தடுப்பூசி வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித் அவர், க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு சுமார் 200,000 மாணவர்கள் முதன் முறையாக தோற்றவுள்ளதோடு, இரண்டாவது தடவையாக தோற்றுவோர் சுமார் 150,000 ஆகும்.

பாடத்திட்டத்தை முடிப்பது கடினம் என்பதால் பரீட்சைகளை ஒத்திவைப்பதே பொருத்தமானது என, பரீட்சைக்கு முதல் முறையாக தோற்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும் இரண்டாவது முறையாக தோற்றும் மாணவர்களின் கருத்து, தாமதமின்றி ஒக்டோபர் மாதத்திலேயே பரீட்சைகளை நடத்த வேண்டுமென்பதாகும்.

எனவே இது தொடர்பாக நியாயமான முடிவொன்று எடுக்கப்பட வேண்டும். இங்கே பரீட்சைத் திணைக்களத்திற்கு பெரும் சுமையும் பங்கும் உண்டு.

எனவே தொழில்நுட்ப ஆலோசனையைப் பின்பற்றி நெகிழ்வான மற்றும் நடைமுறை ரீதியிலான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் உள்ள 10,155 பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களுக்கும் ஜூலை 12ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment