ஹெய்ட்டி ஜனாதிபதியை படுகொலை செய்த 4 பேர் சுட்டுக் கொலை, 2 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 7, 2021

ஹெய்ட்டி ஜனாதிபதியை படுகொலை செய்த 4 பேர் சுட்டுக் கொலை, 2 பேர் கைது

ஹெய்ட்டியின் ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் மீதமுள்ள சில சந்தேக நபர்களுடன் அதிகாரிகள் போராடி வருவதாகவும் காவல் துறைத் தலைவர் லியோன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

லியோன் சார்லஸ் கொல்லப்பட்ட நான்கு பேரும் "கூலிப்படையினர்" என்று கூறியுள்ளார்.

தென் அமெரிக்கா - வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் ஹெய்ட்டி என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இதன் ஜனாதிபதியாக ஜோவெனல் மொய்ஸ் இருந்து வந்தார்.

2017 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோவெனல் மொய்ஸின் பதவிக் காலம் கடந்த பெப்ரவரி மாதம் முடிந்து விட்டது. ஆனால் ஒரு ஆண்டு காலம் பதவியில் நீடிக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன.

இந்த நிலையில் 53 வயதான ஜோவெனல் மொய்ஸின் வீட்டுக்குள் புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் புகுந்த கூலிப்டையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.

இதன்போது ஜனாதிபதி மொய்ஸின் மனைவி மார்ட்டின் மொய்ஸ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜனாதிபதி கொலை செய்யப்பட்டதால் ஹெய்ட்டி நாட்டில் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே துப்பாக்கி சண்டை நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களில் 4 பேரை சுட்டுக் கொன்றனர். 2 பேரை கைது செய்தனர்.

இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது சம்பந்தமாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் கூறும்போது, ஜனாதிபதி கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

ஜனாதிபதி கொல்லப்பட்டதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad