இணையத்தளத்தில் 15 வயது சிறுமி விளம்பரப்படுத்தி விற்பனை : வங்கி முகாமையாளரும், பொலிஸ் அதிகாரியும் சிக்கினர் ! இதுவரை 40 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

இணையத்தளத்தில் 15 வயது சிறுமி விளம்பரப்படுத்தி விற்பனை : வங்கி முகாமையாளரும், பொலிஸ் அதிகாரியும் சிக்கினர் ! இதுவரை 40 பேர் கைது

இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமியை விளம்பரப்படுத்தி விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமியை பணம் கொடுத்து பெற்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் அரச வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவரையுமே இவ்வாறு பொலிஸார் கைது செய்தனர். 

பொலிஸ் விளையாட்டு பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகரும் இரத்மலானை பகுதியை சேர்ந்த முன்னாள் வங்கி முகாமையாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு - கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பொலிஸ் பிரிவின் சிறப்புக் குழு இவர்களைக் கைது செய்தது.

அதன்படி இந்த விவகாரத்தில் இதுவரை 40 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாக சிறுமியை அழைத்துச் சென்றவர்கள், அறிமுகம் செய்தவர்கள், இணையத்தில் பிரசாரம் செய்தோரும் அடங்கின்றனர்.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் 12 ஆவது சந்தேக நபராக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த பின்னணியிலேயே தற்போது உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 7 ஆம் திகதி கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம் 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்கவின் கீழ் அதன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் ஊடாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் 33 வைத்தியர்களின் கண்காணிப்பில் உடலியல் மற்றும் உள சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment