முதலாளிமார்களின் தேவைகளுக்கேற்ப ஊடகங்கள் செயற்பட அனுமதிக்க முடியாது, எவரேனும் அவ்வாறு முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை : ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடுந்தொனியில் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

முதலாளிமார்களின் தேவைகளுக்கேற்ப ஊடகங்கள் செயற்பட அனுமதிக்க முடியாது, எவரேனும் அவ்வாறு முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை : ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடுந்தொனியில் தெரிவிப்பு

ஊடக சுதந்திரத்தை தவறாகப் புரிந்துகொண்டு நாட்டின் சட்ட கட்டமைப்பிற்கு வெளியே சென்று ஊடக முதலாளிமாரின் தேவைக்கேற்றவாறு செயற்பட அனுமதிக்க முடியாது. எவரேனும் அவ்வாறு செய்ய முயற்சித்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லையென வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பிரித்தறிய வேண்டும் எனவும் அதனை குழப்பிக் கொள்ளக் கூடாதென்றும் யாரும் காட்டுச் சுதந்திரத்தை எதிர்பார்க்கக் கூடாதென்றும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில், எந்தவொரு ஊடக நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமத்தையும் இடைநிறுத்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் இது குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அவர் பிரசார செயற்பாடொன்றையே செய்தார். ஊடக அமைச்சரிடம் வினவுவதாக குறிப்பிட்டிருக்கலாம்.

எப்போதும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருப்பதில்லை. மற்றைய அவசர பணிகள் உள்ளன. இடையில் அவர்கள் பாராளுமன்ற விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.

அவ்வாறு ஆளில்லாத நேரத்தில் கேள்வி எழுப்புவது பாழடைந்த வீட்டில் பானையை உடைப்பது போன்றது. சட்டத்தரணிகளை அழைத்து நான் பேசியதாக கூறப்பட்டது.

ஏதாவது அலைவரிசை கட்டமைப்பிற்கு வெளியே இயங்குகிறதென்றால், நாங்கள் காட்டுச் சட்டத்தை அமுல்படுத்தி அதைத் தடுக்கத் தயாராக இல்லை.

சட்டத்திற்கு மாற்றமாக செயற்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு நான் பிரபல சட்டத்தரணிகளை அழைத்து கோரினேன்.

அது தொடர்பில் செயற்பட வேண்டுமாயின் நான் பின்நிற்க மாட்டேன். ஊடக சுதந்திரத்தையும் சட்டத்தையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை எதிர்பார்க்கக் கூடாது.

உலகில் எங்கும் அவ்வாறான சுதந்திரம் வழங்கப்படவில்லை. அனைத்தும் சட்ட கட்டமைப்பிற்குள் நடக்க வேண்டும். அதனால்தான் நான் சட்டத்தரணிகளை அழைத்து பேசினேன். நான் ஒரு அலைவரிசையைச் பற்றி மட்டும் பேசவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad