ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பதிவு : சிறுமியின் பெற்றோர், உறவினர்களிடம் 10 மணி நேரம் வாக்குமூலம் - News View

Breaking

Friday, July 23, 2021

ரிஷாத்தின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பதிவு : சிறுமியின் பெற்றோர், உறவினர்களிடம் 10 மணி நேரம் வாக்குமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் குடும்பத்தாரிடம் நேற்று பொலிஸார் 10 மணி நேரம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். 

அத்துடன் சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் நேற்று மாலை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொரளை பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

கொழும்பிலிருந்து டயகமவுக்கு சென்றிருந்த சிறப்பு பொலிஸ் குழுவினர் சிறுமி ஹிஷாலினியின் பெற்றோரிடமும் சிறுமியின் சிறிய தந்தை மற்றும் அவரை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்த தரகரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

டயகமவிலுள்ள ஹிஷாலினியின் வீட்டில் வைத்து அவரது தாய், தந்தை, தந்தையின் சகோதரர், மற்றும் அவரை வேலைக்கு அமர்த்திய தரகர் ஆகியோரிடமும் சுமார் பத்து மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு பொலிஸ் குழுவுக்கு மேலதிகமாக நுவரெலியா பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் டயகம பொலிசாரும் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மரணமடைந்துள்ள சிறுமி பணிபுரிந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் டயகம பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு பெண்கள் ஏற்கனவே பணியாற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரையும் சிறுமியை வேலைக்கு அமர்த்திய தரகரே ரிசாத் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும் அவர்களிடமும் நேற்றைய தினம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதனை அடிப்படையாக வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சம்பவம் தொடர்பில் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொரளை பொலிசாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் தாயார் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் தமது பிள்ளையை தொழிலுக்காகவே கொழும்புக்கு அனுப்பியதாகவும் ஆனால் அவரது சடலமே சவப்பெட்டியில் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மிகுந்த வருத்தத்துடன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதையே தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்த வேண்டும் எனினும் அவர்கள் இங்கு வந்து எழுப்புகின்ற கேள்விகள் மிக மோசமானவை இன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளை வேறு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர் என்றும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். 

தமது பிள்ளையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை தாம் கண்ணீர் சிந்தி அழப்போவதில்லை என்று தாம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment