வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களால் 251 மில்லியன் ரூபா வருமானம் : அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல - News View

About Us

About Us

Breaking

Friday, July 23, 2021

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களால் 251 மில்லியன் ரூபா வருமானம் : அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

கொவிட்19 சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களை இலங்கை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கான வரி அறவீடு 2021 பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், இதனால் இதுவரை 251 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்திருப்பதாகவும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இவ்வாறு அறவிடப்படும் வரித் தொகையை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், இதன் ஊடாக உள்நாட்டின் கலாசாரம் மற்றும் தேசிய தொலைக்காட்சிக் கலை மற்றும் இத்தொழில்துறையை பாதுகாத்து, இந்நாட்டுக் கலைஞர்களைப் பலப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.

கொவிட்19 தொற்று சூழல் காரணமாக பாடசாலை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சிகளை 16 மணி நேரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்காக செலவிடப்படும் தொகை 22 மில்லியன் ரூபாவாக இருக்கின்றபோதும், 04 மில்லியன் ரூபா மாத்திரமே கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத் தொலைக்காட்சி சேவைகள் தமது பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவை நஷ்டம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து, புதிய நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாகவும், இந்த வருட இறுதியில் இதனை வருமானம் ஈட்டும் மட்டத்துக்குக் கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

கொவிட்19 தொற்று சூழல் காரணமாகப் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க ஊடக நிறுவனங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் சவால் தனது அமைச்சுக்குக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொலைக்காட்சி சேவைகளுக்காக அனுமத்திப்பத்திரம் வழங்கல் மற்றும் தற்பொழுது இயங்கிவரும் செய்தி இணையத்தளங்களைப் பதிவுசெய்யும் செயல்முறைகளை ஒழுங்குபடுத்தல், பத்திரிகை கவுன்சில் சட்டத்தை சகல ஊடகங்களுக்கும் ஏற்புடைய விதத்தில் ஊடகக் கவுன்சில் சட்டமாக மறுசீரமைப்பதற்கு தமது அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாகவும், 22 மில்லியன் சனத்தொகையின் சார்பில் தமது அமைச்சு பொறுப்புக்களை நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, கீதா குமாரசிங்க, கோவிந்தன் கருணாகரன், எஸ்.கஜேந்திரன், சாணக்கியன், உத்திக்க பிரேமரத்ன, டயானா கமகே, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜெகத்.பீ.விஜயவீர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, இலங்கை பத்திரிகை சபயின் தலைவர் மஹிந்த பத்திரன உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment