பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டும் பெற்றோர் அவர்களின் சுகாதார நலனிலும் அதிகமாக அக்கறை கொள்ளுங்கள் : சுகாதார வைத்திய அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 20, 2021

பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டும் பெற்றோர் அவர்களின் சுகாதார நலனிலும் அதிகமாக அக்கறை கொள்ளுங்கள் : சுகாதார வைத்திய அதிகாரி

நூருல் ஹுதா உமர்

கொவிட்-19 கொரோணா வைரஸினை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் சில தினங்களாக அமுல்படுத்தப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள் நாட்டின் சட்ட திட்டங்களை நாட்டின் நற்பிரஜை என்ற வகையில் நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பது நமது தார்மீக பொறுப்பாக இருக்கின்றது. அந்த வகையில் எமது சாய்ந்தமருது பகுதியில் எங்களது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் எமது அலுவலக உத்தியோகத்தர்களினால் இரவு பகலாக நாங்கள் முழு மூச்சாக பணிபுரிவதனை நீங்களும் அறிந்து இருப்பீர்கள் எங்களது பணியானது சாய்ந்தமருதில் வாழும் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழும் மக்களின் சுகாதார நலன் கருதியே என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.

சமகால பிரதேச கொரோனா நிலைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும், எமது பகுதிக்குள் கொரோனா வைரஸானது பரவாமலும் ஏனைய பகுதிக்குள் ஊடுருவாமல் பாதுகாப்பதற்காகவே எங்களது பொதுச் சுகாதார பரிசோதகர் குழு இறுக்கமான நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றோம் இது இவ்வாறு இருப்பினும் இரவு வேலைகளில் களச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது உங்களது பிள்ளைகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதனை எங்களால் அவதானிக்க முடிகின்றது. அவர்களிடம் காரணத்தை வினாவினால் நண்பரின் வீட்டில் படிப்பதற்காக செல்கின்றோம் என்ற காரணத்தினை சுட்டி காட்டிக் கொண்டு இரவு நேரங்களில் வீதிகளில் கூட்டமாக கதைத்துக் கொண்டு இருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டும் நீங்கள் பிள்ளைகளின் சுகாதார நலனிலும் அதிகமாக அக்கறை கொள்ளுங்கள். கொரோணா நோயானது ஒரு நபருக்கு தொற்றினால் உங்கள் குடும்பத்தில் பெரும்பாலான நபர்கள் தொற்றாளராக அடையாளம் காணக் கூடிய சந்தர்ப்பம் மிக அதிகமாக உள்ளது. 

இந்த வகையில் பெற்றோர்களாகிய நீங்கள் உங்களது பிள்ளைகளின் சுகாதார நலன் கருதி நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வீட்டிலேயே கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தளவு வழிவகுத்து கொடுங்கள். 

இனிவரும் நாட்களில் வீதியில் கூடி நின்று எமது பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவால் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் பெற்றோர்களாகிய உங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதனை தெரிவித்து கொள்வதுடன்" கொரோணா என்பது ஆட்கொள்ளி என்பதை நீங்கள் உணராதவரை நமது பிரதேசத்தை பாதுகாப்பது கடினமாக இருந்தாலும் உங்களின் சுகாதார நலனில் நாங்கள் என்றும் அக்கறையாக இருப்போம்" என்றார்.

No comments:

Post a Comment