பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் - News View

Breaking

Post Top Ad

Sunday, June 20, 2021

பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கில் தனிமைப்படுத்தல் தொடரும் : இதுவரை 239 பேர் மரணம் : 12 ஆயிரத்து 676 தொற்றாளர்கள் : உயர் ஆபத்தான வலயங்களாக மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர்

பயணத்தடை நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை வரை 192 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 137 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 52 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 03 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இங்கு பல கிராம சேவக பிரிவுகள் உயர் ஆபத்தான வலயமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன.

இந்த நிலையில், நாட்டின் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் முடக்கப்பட்ட பல பிரதேசங்கள் தொடர்ந்தும் அதே நிலையிலேயே இருக்க வேண்டும் என்றும், இங்கு பொறுப்பு வாய்ந்த சகல தரப்பினரும் ஒன்றிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் மாவட்ட கொவிட் செயலணி தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். தெளபீக் தெரிவித்தார்.

ஜுன் 01ம் திகதி மற்றும் ஜுன் 15ம் திகதியையும் ஒப்பிடும் போது சராசரியாக திருகோணமலையில் தினமும் 80 கொவிட்-19 நோயாளர்களும், 15ம் திகதிக்கு பின்னர் தினமும் 30 நோயாளர்களாகவும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் சராசரி 30 கொவிட்-19 நோயாளர்களும், 15ம் திகதிக்கு பின்னர் சராசரி 15 நோயளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜுன் ஜுன் 01ம் திகதி மற்றும் ஜுன் 15ம் திகதியையும் ஒப்பிடும் போது சராசரியாக தினமும் 100 ற்கு மேற்பட்ட கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்கள். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையெனவும், சில நாட்களில் வழமைக்கு மாறாக கூடுதலான நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, களவாஞ்சிக்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் ஆகிய பகுதிகள் இன்னும் உயர் ஆபத்தான வலயமாக இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 இரண்டாவது அலையில் 25 பேர் மரணமடைந்துள்ளனர். மூன்றாவது அலையில் 214 பேரும் மரணமடைந்துள்ளனர். இதில் திருகோணமலை மாவட்டத்தில் 123 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 24 பேரும, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 31 பேருமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 239 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 4,071 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 4,532 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2,244 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,829 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 12 ஆயிரத்தி 676 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பயணத்தடை நீக்கப்படும் பட்சத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

அவசிய தேவையின்றி பொது மக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி வீதிகளில் நடமாட வேண்டாமெனவும், அத்தியவசிய தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் செல்ல வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம். ஹனீபா, கியாஸ்)

No comments:

Post a Comment

Post Bottom Ad