நா.தனுஜா
போர் காலத்தில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
போரின் போதான பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்தேச தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மனித உரிமைகள் தொடர்பான தூதுவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாடுகள் பலவற்றிலும் போரின் போதான பாலியல் வன்முறைகள் என்பது அதிகளவில் பதிவாகிவருகின்றன. சமாதானம், அமைதி என்பன நிலைநாட்டப்பட்ட பின்னரும்கூட சில நாடுகளில் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சுதந்திரமாகச் செயற்படும் போதிலும், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.
தற்போது கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அனைத்து அரசாங்கங்களும் செயற்பட்டு வருவதுடன், அதற்காகவே அனைத்து வளங்களையும் ஒதுக்கீடு செய்துள்ளன. இதன் காரணமாக பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உடலியல் சிகிச்சைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகள் என்பவற்றை வழங்குவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
போர் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவங்களைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்தி மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு அணுகுவதே அவற்றுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தரும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட போரின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான 2467 தீர்மானத்தின் அடிப்படையில், பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து நடத்தும் வலையமைப்புக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் நாம் நெருங்கிச் செயலாற்றி வருகின்றோம்.
பாலியல் வன்முறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசியமான நீதியை உறுதிசெய்வதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
அதேவேளை போர்காலத்தில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிப்பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை நாமனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment