தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் இந்திரகுமார் பிரசன்னா மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஊடாக கிடைக்கப் பெற்றதே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடான 13 ஆவது திருத்தச் சட்டம்.
குறித்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் கபட நாடகம் ஆடுகின்றது.
இதேவேளை இந்தியா, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு ஒத்துழைப்பதாக கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காமல் அதனை செயற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தற்போதைய அரசாங்கம், மாகாண சபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் செயற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.
ஆகவே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள், இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, அதனூடாக தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment