குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி விடக்கூடாது - வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் பலியாகி விடக்கூடாது - வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம்

(நா.தனுஜா)

கொவிட்-19 பரவல் காரணமாக அனைத்து மக்களும் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறிருக்கையில் ஒரு பிரிவினர் மாத்திரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வேளையில் சிலர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய தூண்டுதல்களைச் செய்கின்றார்கள். அவர்களுடைய நோக்கங்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் பலியாகிவிடக்கூடாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று  சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மற்றும் ஒற்றுமையின் காரணமாக தொற்றுப் பரவலின் முதலாம் மற்றும் இரண்டாம் அலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, அதனைக் கட்டுப்படுத்த முடிந்தது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை காரணமாகத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அசாதாரணமான வகையில் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அண்மைக் காலத்தில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் வைத்தியசாலைகளில் எமது சங்கத்தின் உறுப்பினர்களைப் பணிக்கு அமர்த்தி, மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகள் தடைப்படாதவாறு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாகப் பட்டப்படிப்பிற்குப் பின்படிப்பு நிலையத்திலிருந்து சுமார் 2,500 இற்கும் அதிகமான வைத்தியர்களை கொரோனா வைரஸ் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகப் பணியமர்த்திருக்கிறோம்.

அதேவேளை நாடளாவிய ரீதியில் 500 இற்கும் அதிகமான கர்ப்பிணி வைத்தியர்கள் உள்ள நிலையில், அவர்கள் வீடுகளிலிருந்தவாறு பணியாற்றலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் பணியை கர்ப்பிணி வைத்தியர்கள் வீடுகளிலிருந்தவாறே முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வாறு வைத்தியர்கள் இரவு, பகல்பாராமல் தொடர்ச்சியாகப் பணிபுரிந்துவருகின்றார்கள்.

இருப்பினும் துரதிஷ்டவசமாக சுகாதாரத் துறையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சில துறைகளின் தொழிற்சங்கங்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்களைப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்குத் தூண்டுதலளித்து வருகின்றார்கள். இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நாமனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் ஒரு பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதென்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.

இவ்வேளையில் சிலர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய தூண்டுதல்களைச் செய்கின்றார்கள். அவர்களுடைய நோக்கங்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் பலியாகாமல், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment