தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளவும் அதனை தோல்வியுறச் செய்யவும் கூடிய அனுபவமுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதன் மூலம் அவர்களது அரசியல் தெளிவற்ற தன்மையை அவர்கள் வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில் மாகாணசபை அமைச்சராக தாம் பதவி வகித்த காலத்தில் தமக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் ஒத்துழைப்புடன் அதனை தோல்வியுறச் செய்ய முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் எதிர்க்கட்சி எனக்கு எதிராக கொண்டுவர முயற்சிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை சிறுவனின் கடிதம் போன்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுத்து மூலம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தபோது அதில் வெளியேற வேண்டியது அமைச்சர் கம்மன்பில அன்றி அரசாங்கமே என அதில் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சி தலைவரே அவ்வாறு தெரிவித்திருக்கும்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை மீது அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
அந்த வகையில் பார்க்கும்போது அது எனக்கு எதிராகவன்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்றே எண்ணத்தோன்றுகிறது.
அது மட்டுமன்றி இது சாகர காரியவசத்தை அசௌகரிகரியத்துக்கு உட்படுத்தும் நோக்கில் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை என்றும் கருதத் தோன்றுகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment