தகுதியானவர்களை கொவிட் செயலணியிலிருந்து அரசாங்கம் ஓரங்கட்டியது ஏன்? - கேள்வி எழுப்பியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

தகுதியானவர்களை கொவிட் செயலணியிலிருந்து அரசாங்கம் ஓரங்கட்டியது ஏன்? - கேள்வி எழுப்பியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி

(ஆர்.யசி)

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் இருந்து பேராசிரியர் திஸ்ஸ விதாரண, விசேட வைத்தியர் சுதர்ஷினி, அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோரை அரசாங்கம் ஓரங்கட்டியது ஏனென்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், விடயத்திற்கு பொறுப்பான நபர்களை உரிய நேரத்தில் பயன்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வி எழுப்புகின்றார்.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும், இந்த திட்டங்கள் மக்களால் உணரக்கூடியதாக உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது. அரசாங்கத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளே இதற்கு காரணமாகும். எனினும் அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல நாமும் முயற்சிகளை எடுக்கின்றோம்.

அதுமட்டுமல்ல மக்களின் ஆதரவை பெற்றே நாம் ஆட்சி அமைத்துள்ளோம். அவ்வாறு இருக்கையில், மக்கள் தெரிவு செய்த எமது அரசாங்கத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்று குறித்த அதிகமான தெளிவையும், அறிவையும் கொண்ட மூவர் உள்ளனர்.

வைரஸ்கள் குறித்த சர்வதேச மட்டத்திலான அறிவும், தொடர்புகளும், பயிற்சிகளும் பெற்றுள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வைரஸ்கள் தொடர்பான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா. இவர்கள் மூவருமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும் கொவிட்-19 தடுப்பு வேலைத்திட்டத்தில் இருந்து அரசாங்கம் அவர்களை ஓரங்கட்டியது ஏனென்ற கேள்வி உள்ளது.

தீர்மானங்கள் எடுக்கும் செயற்பாடுகளில் சுகாதார அமைச்சருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையோ அல்லது கொவிட்-19 தடுப்பு செயற்பாடுகளில் இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்பதையோ நாம் மறுக்கவில்லை. ஆனால் விடயத்திற்கு பொறுப்பான நபர்களை உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும். அதில் அரசாங்கம் தவறிழைத்து வருகின்றது என்றே தோன்றுகின்றது.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு நாம் அரசாங்கத்தை விமர்சிக்க தயாராக இல்லை, ஆனால் இது நாட்டு மக்களுக்கான பொதுவான பிரச்சினையாகும். இதில் பாகுபாடு பார்க்கவோ, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் பாகுபாடு பார்க்கவோ இது உகந்த நேரமில்லை.

இதில் அனுபவமும், அறிவும் கொண்ட ஆளும் கட்சியிலும், எதிர்கட்சியிலும் உள்ள நபர்களை இணைத்துக் கொண்டு அரசியலை தாண்டிய சேவையை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment