ரணிலின் பாராளுமன்ற வருகை எதிர்க்கட்சிக்கே பெரும் சக்தியாக அமையும், மூழ்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தில் கால் வைக்கமாட்டார் - கித்சிறி மஞ்சநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, June 21, 2021

ரணிலின் பாராளுமன்ற வருகை எதிர்க்கட்சிக்கே பெரும் சக்தியாக அமையும், மூழ்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தில் கால் வைக்கமாட்டார் - கித்சிறி மஞ்சநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகையின் மூலம் எதிர்க்கட்சிக்கே பெரும் சக்தியாக அமையும். மூழ்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தில் அவர் கால் வைக்கமாட்டார் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்துக்கு சென்று பதவி பிரமாணம் செய்துகொள்வார். 

பாராளுமன்றத்துக்கு செல்ல அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவர் அரசாங்கத்துக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்தி இருந்தார். என்றாலும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை.

தற்போது நாடு மிகவும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்துக்கு சென்று இது தொடர்பில் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலே அவர் பாராளுமன்றம் செல்ல தீர்மானித்தார்.

அத்துடன் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. அதனால்தான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் மரணங்களும் அதிகரித்து இருக்கின்றன. அதேபோன்று நாட்டின் பொருளாதாரமும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருகின்றது.

கொவிட்டை காரணம் காட்டி அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றது. அதனால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

அத்துடன் நாட்டின் எதிர்க்கட்சியும் அரசாங்கத்துக்கு முறையான அழுத்தங்களை காெடுப்பதற்கு தவறி இருக்கின்றது. நாட்டில் அரசாங்கமும் பைல், எதிர்க்கட்சியும் பைல் என்பதே மக்களின் நிலைப்பாடாகும். அதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இவ்வாறான நிலையில் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வருவதை எதிர்க்கட்சி தங்களுக்கு பெரும் சக்தியாகவே பார்க்க வேண்டும். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் சிலர், ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் வருவதை விமர்சித்து வருகின்றனர்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க யாருடைய விம்பத்தையும் உடைக்கவோ அல்லது உயர்த்தவோ பாராளுமன்றம் வருவதில்லை. நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியின் கடமையை மேற்கொள்ளவே வருகின்றார்.

அரசாங்கம் எனும் கப்பல் மக்களின் நம்பிக்கையை இழந்து தற்போது மூழ்கிக் கொண்டிருக்கின்றது. மூழ்கும் கப்பலில் ரணில் விக்ரமசிங்க கால் வைக்கமாட்டார். மாறாக எதிர்க்கட்சியின் கடமையை சரியாக மேற்கொண்டு அடுத்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இலக்காகும் என்றார்.

No comments:

Post a Comment