(எம்.மனோசித்ரா)
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளக்கூடிய ஏனைய நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அரசாங்கம் ஊடகங்கள் ஊடாக நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தற்போது அரசாங்கம் எடுக்க வேண்டிய ஒரேயொரு தீர்மானம் உனடியாக பதவி விலகி நாட்டை உரியவர்களிடம் ஒப்படைப்பதேயாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலையேற்றத்தினைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணம், பேக்கரி உற்பத்திகளின் விலை மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான விடயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே சாகர காரியவசம் மற்றும் உதய கம்மன்பில ஊடாக ஊடகங்களில் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவ்வாறான போலியான நாடகங்களை உடன் நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.
எரிபொருள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் இரத்த ஓட்டமாகும். எரிபொருள் ஊடாகவே சகல சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறிருக்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். கொவிட் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் இவ்வாறு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்படுவது எவ்வாறு தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும்?
இதேபோன்று முறையற்ற தீர்மானங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அரசாங்கம் சகல துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
வாழ்க்கை செலவு கூட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உகந்த தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமே தவிர இவ்வாறு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடாது. அரசாங்கத்தின் போலியான செயற்பாடுகள் தற்போது பகிரங்கமாகியுள்ளது.
எனவே தற்போது அவர்களுக்கு காணப்படுகின்ற ஒரே தீர்வு உடனடியாக பதவி விலகி, பொறுத்தமானவர்களிடம் நாட்டை ஒப்படைப்பது மாத்திரமேயாகும். இதன் ஊடாகவே அரசாங்கத்திலுள்ளவர்களின் தமது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment