கப்பலின் இலங்கைப் பிரதிநிதியிடம் இன்று சிஐடி விசாரணை : வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

கப்பலின் இலங்கைப் பிரதிநிதியிடம் இன்று சிஐடி விசாரணை : வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

தீ பரவலுக்கு உள்ளாகி மூழ்கி வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கைப் பிரதிநிதியான சீ கன்சோடியம் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன ஹெட்டி ஆரச்சியிடம் இன்று (16.06.2021) சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே, இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அவர் சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நேற்று செவ்வாய்கிகழமை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

'குறித்த இலங்கை பிரதிநிதியை விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 2 விசேட குழுக்கள் முயன்ற நிலையில், அவரை நேற்று வரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் இல்லை.

இன்று விசாரணைகளுக்கு அவரை அழைத்தும் அவர் வரவில்லை.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் சி.ஐ.டி. சார்பில் நேற்று கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிவித்து அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரினார்.

எவ்வறாயினும், கப்பலின் இலங்கை பிரதிநிதியான சீ கன்சோட்டியம் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன ஹெட்டி ஆரச்சி சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, அவர் நாளை (இன்று) மு.ப. 9.30 மணிக்கு சி.ஐ.டி.யில் வாக்கு மூலம் வழங்க ஆஜராவார் என அறிவித்தார். 

அவர் எங்கும் செல்லவில்லை எனவும் விசாரணைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்படவில்லை.

இதனிடையே, கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி சீ கன்சோட்டியம் தனியார் நிறுவனத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் காப்புப் பிரதியை சி.ஐ.டி.யிடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நேற்று சி.ஐ. சார்பில் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட அதற்கு பதிலளித்த நிலையில், அந்த மின்னஞ்சல் காப்பானது 6 டெரா பைட் கொள்ளளவினை கொண்டுள்ளதால், பிரதி செய்வதற்கு அதிக நேரம் எடுப்பதாகவும், பெரும்பாலும் நாளை (இன்று) அவற்றை கையளிக்க முடியுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment