ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்க ஆராய்வு : கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்க ஆராய்வு : கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவிப்பு

ஒன்லைன் மூலம் மதுபான விற்பனைக்கு சட்டபூர்வமாக அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக நிதியமைச்சின் அனுமதியைக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் முன்னொருபோதும் இல்லாத வகையில் சட்டவிரோதமான மதுபான விற்பனை அதிகரித்துச் செல்லும் நிலையில் நிலைமையை கவனத்திற் கொண்டு ஒன்லைன் மூலமான மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயணத்தடை காரணமாக சட்டவிரோத மதுபான விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளதால் அது பெரும் சமூக பிரச்சினைக்கு வழிவகுத்து வருகிறது.

அவ்வாறு சட்டவிரோதமான மதுபானம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்தும் வகையிலேயே ஒன்லைன் மூலமாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் மூலமாக மதுபானம் விற்பனை செய்வதற்கு சட்ட ரீதியான அனுமதி கோரி பல நிறுவனங்கள் கலால் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அவ்வாறு சட்ட ரீதியான அனுமதி வழங்குவதற்கு நிதியமைச்சின் அங்கீகாரம் கட்டாயமானதாகும். அதனை கருத்தில் கொண்டு நிதியமைச்சின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதுவரை நிதியமைச்சின் பதில் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சட்ட விரோத மதுபானம் அருந்தியதன் காரணமாக பலர் உயிரிழந்தமை தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

பயணத்தடை நடைமுறையில் உள்ள காலத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 50 விற்பனை நிலையங்கள் தொடர்பில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment