அரசாங்கத்துக்கு உணர்த்தும் வகையில் நாளையதினம் சுகாதார பணியாளர்கள் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

அரசாங்கத்துக்கு உணர்த்தும் வகையில் நாளையதினம் சுகாதார பணியாளர்கள் போராட்டம்

(நா.தனுஜா)

சுகாதாரப் பணியாளர்களுக்குரிய விசேட நிவாரணக் கொடுப்பனவு மற்றும் பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்காமலிருப்பது தவறான விடயம் என்பதை உணர்த்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் உள்ள கொவிட்-19 வைத்தியசாலைகள் மற்றும் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நாளையதினம் விசேட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக சுகாதாரத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்துள்ளன.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை சுகாதாரத் தொழிற்சங்க ஒன்றிணைவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இது குறித்து தெளிவுபடுத்திய சமன் ரத்னப்பிரிய மேலும் கூறியதாவது,

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுகாதாரப் பிரிவினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வசதிகள் வழங்கப்படாமையினாலும் இது குறித்து இன்றையதினம் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ஊடாகவும் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்கப் பெறாமையினாலும் நாளையதினம் அமுல்படுத்தத் தீர்மானித்திருக்கும் வேலை நிறுத்தம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

கொவிட்-19 தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட நிவாரணக் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையுடன் அதனுடன் தொடர்புடைய மேலும் சில கோரிக்கைகளை நாம் முன்வைத்திருந்ததுடன் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சருடன் மூன்று சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அந்த வகையில் இன்றும் இது குறித்து அமைச்சருடன் கலந்துரையாடிய போதிலும், எதிர்பார்த்த பெறுபேறு கிட்டவில்லை. சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள்.

குறிப்பாக, நாம் ஏற்கனவே கூறியதைப்போன்று கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவசியமான பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அவ்வாறிருந்தும் கூட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதன் காரணமாகவே இந்தளவிற்கேனும் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது.

சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளின் காரணமாகவே கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் செயற்திறன் வீழ்ச்சிகண்டுள்ளது.

இத்தகைய செய்றபாடுகளின் காரணமாக கடந்த 3 ஆம் திகதி சாதாரண வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் சுகாதாரப் பணியாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தினோம்.

ஆனால் பல தடவைகள் எமது கோரிக்கைகளை முன்வைத்ததன் பின்னரும் கூட, தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இதனை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் உரத்துக்கூறுவதைத் தவிர எம்மிடம் மாற்றுவழிகள் எவையுமில்லை.

இவ்வாறானதொரு பாரிய நெருக்கடி நிலையின்போது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுத்து, குறித்த சவாலை எதிர்கொள்வதற்கான அனைவரையும் ஒன்றிணைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும் இந்த அரசாங்கம் அதனைச் செய்யவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் சீராகப் பணியாற்றாவிட்டால், ஏனைய அரச ஊழியர்கள் இருந்தும் பயனில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் தற்போது வழங்குகின்ற மேலதிக சேவைக்குரிய கொடுப்பனவை வழங்குமாறு கோருகின்ற போதிலும், சுகாதார அமைச்சினால் வைத்தியர்களுக்கான ஊதியமே அதிகரிக்கப்படுகின்றது. கீழ்மட்ட சுகாதாரப் பணியாளர்களைக் கருத்திற் கொள்ளாமல், சுகாதார அமைச்சு முறையாற்ற நிர்வாகத்திலேயே ஈடுபடுகின்றது.

ஆகவே நாடளாவிய ரீதியில் உள்ள கொவிட்-19 வைத்தியசாலைகள் மற்றும் மத்திய நிலையங்களில் உள்ளவர்களை வேறாக்கி, அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு நாளைய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவிருக்கின்றோம். 

அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தவறானவை என்பதை உணர்த்தும் நோக்கிலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.

எனினும் எந்தவொரு கொவிட்-19 வைத்தியாசாலைகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்த எதிர்ப்பு அமையாது என்றும் உறுதியளிக்கின்றோம். 

அது மாத்திரமன்றி மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலைகள் போன்ற 15 விசேட வைத்தியசாலைகளில் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தமாட்டோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment