(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் தற்போது அரசியல் பிரச்சினையாகியுள்ளது. அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை விமர்சித்து அதன் பொறுப்பை ஒருவர் மீது சுமத்துவது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும் என்று போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது. தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் அரசாங்கத்திற்குள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை மற்றும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் தற்போது அரசியல் பிரச்சினையாகி விட்டது. ஆளும் தரப்பினரை விமர்சித்து ஆளும் தரப்பினரே அறிக்கை விடுவது அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது.
அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை விமர்சித்து அதன் பொறுப்பை ஒருவர் மீது சுமத்துவது சிறுபிள்ளைத்தனமாக செயற்பாடாகும்.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பஸ் கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர். எக்காரணத்திற்காகவும் அதிகரிக்கப்பட மாட்டாது.
ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகள் பஸ் பயணம் செய்ய வேண்டும் என கூறப்பட்ட, தீர்மானத்தை செயற்படுத்த வேண்டுமாயின் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கத்தினர் தெரிவித்தனர். இவர்களின் கோரிக்கைக்கு அமைய பஸ் கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக தனியார் பேருந்து சங்கத்தினர் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பலவற்றை இதுவரையில் நிறைவேற்றியுள்ளோம். 3 இலட்சம் ரூபா கடனுதவி, லீசிங் உதவி, எரிபொருள் ஊடாக நிவாரணம் ஆகிய நிவாரணங்களை வழங்கியுள்ளோம்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது. ஆகவே இவ்வாறான பின்னணியில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது.
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொருளாதார ரீதியில் தாம் பாதிக்கப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள். நாடு வழமை நிலைக்கு திரும்பிய பின்னர் இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment