எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பல் தீ - துறைமுகத்திலுள்ள 'ரேடியோ தகவல்கள்' பதிவினை உடனடியாக பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 15, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பல் தீ - துறைமுகத்திலுள்ள 'ரேடியோ தகவல்கள்' பதிவினை உடனடியாக பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த தீ பரவலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பல், சுமார் 10 கடல் மைல் தூரத்தில் 70 அடி (21 மீற்றர்) ஆழத்தில் தொடர்ந்தும் கடலில் மூழ்கி வரும் நிலையில், அக்கப்பலிலிருந்து பரிமாற்றப்பட்ட 'ரேடியோ தகவல்கள்' துறைமுக வளாகத்தில் உள்ள பதிவு இயந்திரத்தில் பதிவாவதால், உடனடியாக அப்பதிவுகளைப் பெற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதியான சீ கன்சோர்டியம் லங்கா தனியார் நிறுவனத்தின் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன முன் வைத்த விடயங்களை ஆராய்ந்தே, கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

தீயில் எரிந்து மூழ்கி வரும் கப்பல் விவகாரம் தொடர்பிலான முறைப்பாடு மீதான விசாரணைகள் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதானமாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இந்த விவகாரத்தில் விசாரணைகள் இடம்பெரும் நிலையில், அச்சட்டத்தின் 12 ஆம் அத்தியாயம் பிரகாரம் நீதிமன்ற அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உள்ள நிலையில், குற்ற விசாரணைகளுக்கு உதவும் விதமாக குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயம் பிரகாரம், விசாரணைகளுக்கான உத்தரவுகளை வழங்குதல் மற்றும் விசாரணைகளை மேற்பார்வைச் செய்யும் நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கு நேற்று இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நேற்று குறித்த விவகாரம் விசாரணைக்கு வந்த போது, விசாரணையாளர்களான சி.ஐ.டி. சார்பில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பிரேமரத்ன, கப்பல் விசாரணைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் அபேசிங்க, சி.ஐ.டி.யின் சமுத்திர விவகார பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக பொலிஸ் பரிசோதகர் குமாரசிறி உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

அவர்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னக்கோன் தலைமையில், சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம, சிரேஷ்ட அரசசட்டவாதி பஸ்லி ராஸிக், அரச சட்டவாதி மாலிக் அஸீஸ் உள்ளிட்ட குழுவினர் பிரசன்னமாகினர்.

இந்நிலையில் கப்பல் கெப்டன், பிரதான பொறியியலாளரான சீன பிரஜை, உதவி பொறியியலாளரான இந்திய பிரஜை உள்ளிட்டோரின் உரிமைகள் தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விபுல விமலசேன தலைமையிலான குழுவினர் ஆஜராகினர்.

அத்துடன் கப்பலின் உள்நாட்டு பிரதிநிதியான சீ கன்சோடியம் தனியார் நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், கப்பலின் உள்நாட்டு பிரதிநிதியான சீ கன்சோர்டியம் லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜுன ஹெட்டி ஆரச்சி சார்பில் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும் மன்றில் ஆஜரானார்.

இந்நிலையில், முதலில் இதுவரை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை சி.ஐ.டி. சார்பில் மன்றில் வாதாடிய அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் முன் வைத்தார்.

நீதிமன்றம் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள சில உத்தரவுகளை நடைமுறைப்படுத்த உரிய தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது நீதிவான் லோச்சனா அபேவிக்ரம, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயம் கீழ் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளை மதிக்காது நடக்கும் தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற கட்டமைப்பு சட்டம் பிரகாரம் நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலும், விசாரணைகளுக்கு பாதிப்பினை எற்படுத்தியமை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட வி.டி.ஆர். உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற கடந்த தவணையின் போது அளிக்கப்பட்ட உத்தரவு தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் விபரித்தார்.

'இந்த வி.டி.ஆர். உபகரணத்தை நாம் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளோம். எனினும் குறித்த உபகரணத்தை உற்பத்தி செய்த நிறுவனத்தின் பங்களிப்பின்றி அதனை பகுப்பாய்வு செய்வது சிரமம் என அரச இரசாயன பகுப்பாய்வாளர் அரிவித்துள்ளார்.

அந்த வி.டி.ஆர். உபகரணத்தை உற்பத்தி செய்தது ஒரு ஜப்பானிய நிறுவனம். அவர்களின் ஆசிய பசுபிக் வலய பிரதிநிதி சிங்கப்பூரில் உள்ளார். குறித்த சிங்கப்பூர் நிறுவனத்தின் உதவியைப் பெற்று மேலதிக பகுப்பாய்வுகளை முன்னெடுக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.' என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் கூறினார்.

இந்நிலையில், கப்பலின் உள்நாட்டு பிரதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன மன்றில் வாதங்களை முன் வைத்தார்.

'விசாரணைகள் நியாயமாக நப்பது வெளிப்படையாக தெரிய வேண்டும். எனினும் இந்த விவகாரத்தில் அப்படி தெரியவில்லை. கப்பலின் வீ.டி..ஆர். போன்றே துறைமுக அதிகார சபையிலும் அனைத்து தகவல்களும் பதிவாகும் கருவி உள்ளது கப்பலில் இருந்து கொடுக்கப்பட்ட அனைத்து ரேடியோ தகவல்களும் அதில் பதிவாகும். அந்த பதிவுகளை முதலில் பரிசோதிக்காது கப்பலின் வீ.டீ.ஆர். மீது மட்டும் கை வைப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே கப்பலின் வீ.டி.ஆர். போன்றே துறைமுகத்தில் உள்ள ரேடியோ தகவல் பதிவுகளையும் பெற்று விசாரிக்க வேண்டும்.' என ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டார்.

அதனை நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம ஏற்றுக் கொண்டதுடன் துறைமுகத்தில் உள்ள ரேடியோ தகவல் பதிவுகளைப் பெற்று விசாரணை நடாத்த சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே அனைத்து வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம, இவ்விவகார வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment