கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த வருடம் ஜூலை 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர், இன்றையதினம் (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பான வழக்கில் அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸுக்கும் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அவர்கள் சார்பில் அவர்களது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை விசாரித்த நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இருவரையும், தலா ரூபா 25,000 ரொக்கம் மற்றும் ரூபா 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கும் உத்தரவை வழங்கிய நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டுகளை மன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
முன்னாள் DIG வாஸ் குணவர்தன ஆயுதக் கிடங்கொன்றை வைத்திருந்ததாக, போலியான ஆதாரங்களை முன்வைத்து, சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில், கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர, கடந்த வருடம் ஜூலை 31ஆம் திகதி கைதுசெய்ய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் CIDயினர் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்ததோடு, ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கொவிட்-19 கொத்தணி காரணமாக, ஷானி அபேசேகர கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்ததோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சுகவீனமுற்ற அவர் சிறைச்சாலை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment