மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச் சட்டம் : அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யவும் இணக்கம் என்கிறார் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச் சட்டம் : அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யவும் இணக்கம் என்கிறார் அலி சப்ரி

(ஆர்.ராம்)

நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அத்துடன், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் காணப்படும் விமர்சனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பினை மையப்படுத்தியே இந்த மீளாய்வு முன்னெடுக்கப்பட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் கூட்டாக இணைந்து பயங்கரவாத தடைச் சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

மேலும், இந்த மீளாய்வைச் செய்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்குரிய அனுமதியை அமைச்சரவையிடத்திலிருந்து பெற வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, அமைச்சரவைப் பத்திரமொன்றை முதலில் தயார் செய்வதற்கு நீதி, வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சுக்களிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விடயத்தினை அடுத்து வரும் காலப்பகுதியில் விரைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடுவது, மீளாய்வு செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான புதிய சட்டத்தினை அல்லது திருத்தப்பட்ட சட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment