கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வேன் : உறுதியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களுக்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்வேன் : உறுதியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான முதற்கட்ட வாழ்வாதார உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புக்களும் மதிப்பீடு செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படுவதுடன் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக கலந்துலையாடி நியாயமான பரிகாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பாக நீர்கொழும்பு பிரதேச மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையில் இன்று (12.06.2021) நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், குறித்த கப்பல் விபத்தினால் தாங்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை எடுத்துரைத்த, நீர்கொழும்பு கடற்றொழிலாளர்கள், தமக்கு தற்போது ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்புகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈட்டினை அல்லது நிதி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், கப்பல் விபத்து மாத்திரமன்றி, கொரோனா பரவல் காரணமாகவும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில், எரிபொருளின் விலையேற்றம் மேலதிக சுமையாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன், அண்மைக்காலமாக சந்தைக்கு வருகின்ற வலைகளின் தரம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்ட கடற்றொழிலாளர்கள், தரமான வலைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அதுதவிரவும் தமது தொழில் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பும்வரை பாதிக்கப்பட்டுள்ள கடலை நம்பி வாழும் சுமார் பத்தாயிரம் ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலம் தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உறுதிப்படுத்துவதுடன், சந்தை வாய்ப்பு சீராகும்வரை அந்த மீன்களை, மீன்பிடித் திணைக்களமே கொள்வனவு செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி, கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டவர்களும் வாழ்வாதார பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கான நஷ்டஈட்டினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன், அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உறுதியளிக்கப்பட்ட முதற் கட்ட வாழ்வாதார உதவித் தொகையினை அடுத்த சில நாட்களுக்குள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாவும், முழுமையான பாதிப்புக்களுக்கான பரிகாரங்கள் கட்டங்கட்டமாக விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி நியாயமான பரிகாரம் பெற்றுத் தரப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment