பாதாளத்தில் விழுந்த பொருளாதாரத்தை கொண்ட நாட்டையே நாம் பொறுப்பேற்றோம் என்கிறார் அஜித் நிவாட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

பாதாளத்தில் விழுந்த பொருளாதாரத்தை கொண்ட நாட்டையே நாம் பொறுப்பேற்றோம் என்கிறார் அஜித் நிவாட் கப்ரால்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக முன்னைய அரசாங்கம் செய்ததை போன்று அரசாங்கத்தின் கொள்கையை மாற்றிக் கொண்டு நெருக்கடிகளை உருவாக்கிக் கொள்ளாது இராஜதந்திர ரீதியில் அதற்கான நடவடிக்கை எடுப்பதுடன் சவால்களுக்கு முகங்கொடுத்து பொருளாதார ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் அதிகாரத்தில் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருப்பார். அவ்வாறு செய்திருந்தால் எவ்வாறான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்பது எமக்கும் தெரியும். 

நாம் எப்போதும் எமது எதிர்கால பயணம் குறித்தே சிந்திக்க வேண்டும். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி எமது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறுகிறனர். ஆனால் முன்னைய ஆட்சியாளர்கள் ஆட்சியை எமது கையில் கொடுக்கும் வேளையில் கடனில் நெருக்கப்பட்ட நாட்டையே எமக்கு கொடுத்தனர். 13 ட்ரில்லியன் வரையில் நாட்டின் கடன் உயர்த்தப்பட்டது. கடனுக்கான வட்டியும் உயர்வடைந்திருந்து. 

ஆகவே பாதாளத்தில் விழுந்த பொருளாதாரத்தை கொண்ட நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். 2020 ஆம் ஆண்டிலும் எமக்கு சவாலான ஆண்டாக இருந்தது, நீண்ட கால முடக்கம், கொவிட் பரவல் காரணமாக எம்மால் உயிர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் பாதுகாப்பு அவசியம் என கருதினோம். இப்போதும் அதே நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம் என்றார்.

எதிர்கட்சியாக இந்த விடயத்தில் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. அதனை ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் சரியாக தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டிலும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதும். அரச வருமானம் நெருக்கடியை சந்தித்துள்ளது. இது சகலருக்கும் தெரிந்த விடயமே. எனினும் நெருக்கடிகளை சமாளித்து நகரவே நாம் முயற்சித்து வருகின்றோம். 

இன்று குறைநிரப்பு பிரேரணை ஒன்றினை நாம் முன்வைத்துள்ளோம். 131 பில்லியன் ரூபா நேரடி கொவிட் தேவைகளுக்காகவும் ஏனைய தொகை உப தேவைகளுக்காக ஒதுக்கியுள்ளோம். உடனடியாக கையாளக்கூடிய விதத்தில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிதி நிறுவனங்களுடன் நாம் உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளோம். சலுகைகளையும் பெற்று வருகின்றோம். இந்த சலுகைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் எம்மால் நகர முடிகின்றது என்றார்.

No comments:

Post a Comment