(செ.தேன்மொழி)
பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் 3 கோடி 6 இலட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய் பணம், தங்க நகை உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறிதாவது, தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் அமைந்துள்ள இரு மாடி வீடொன்றில் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இதன்போது குறித்த வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், கொள்ளையர்கள் வீட்டுக்குள் செல்லும் காட்சிகள் அடங்கிய சி.சி.ரீ.வீ. காணொளிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இது தொடர்பில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து 2 கோடி 12 இலட்சத்து 22 ஆயிரத்து 748 ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை மேலும் மூன்று சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருளப்பனை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 38,43,44 ஆகிய வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment