ஆட்சி பொறுப்பேற்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

ஆட்சி பொறுப்பேற்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் - காவிந்த ஜயவர்தன

எம்.மனோசித்ரா

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று தீவிரமடைந்தமைக்கு காரணமானவர்களுக்கும், பேர்ள் கப்பல் தீ விபத்தினால் கடல் வாழ் உயிரினங்கள் இறக்க காரணமானவர்களுக்கும் 2024 இன் பின்னர் ஆட்சி பொறுப்பேற்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், உக்ரேன் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைத்தமையே இன்று நாட்டில் கொவிட் தொற்று தீவிரமடைந்து 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமாகும். எனவே இவ்வாறு பொறுப்பற்று செயற்பட்டோருக்கு எதிராக 2024 இன் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுகின்றேன்.

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து இவ்வாறு பொறுப்பற்று செயற்பட்டோருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இன்று இலங்கையில் நூறில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் தகவல்களும் நம்பத்தகுந்தவையாக இல்லை.

நாடு முழுவதும் தொற்றாளர்கள் இனம் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிடும் மருத்துவர்கள் இன்னும் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் நாமே எம்மை ஏமாற்றிக் கொள்கின்றோம்.

தற்போது கடல் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதற்கு பேர்ள் கப்பல் தீ விபத்தே காரணமாகும். உண்மையில் இந்த உயிரினங்கள் இறக்கவில்லை. அவற்றை கொலை செய்துள்ளனர். இந்த அப்பாவி உயிரினங்களில் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் தமது பிழைகளை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். அதனை விடுத்து இவை உயிரிழப்பதற்கு பருவ பெயர்ச்சி காலநிலையே காரணம் என்று கூறுவது பொறுத்தமல்ல. நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல.

எனவே இவ்விடயம் தொடர்பில் 2024 ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து பொறுப்பற்று செயற்பட்டோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment