வைத்தியர், கடற்படையினரைப் போன்று தம்மை அடையாளப்படுத்தி போதைப் பொருள் கடத்தியவர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

வைத்தியர், கடற்படையினரைப் போன்று தம்மை அடையாளப்படுத்தி போதைப் பொருள் கடத்தியவர்கள் கைது

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போதைப் பொருள் தொடர்பில் நேற்று ஞாயிறுக்கிழமை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் வெவ்வேறு பிரதேசங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வைத்தியர் மற்றும் கடற்படையினரைப் போன்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பயணித்த இரு சந்தேகநபர்களும், 17 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட மேலும் இரு சந்தேகநபர்களும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

நேற்று ஞாயிறுக்கிழமை வைத்தியர் சேவைக்குரிய இலட்சினையுடன் மருதானையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரொன்றை பொலிஸார் நிறுத்தி சோதனைக்குட்படுத்தினர்.

இந்தக் காரில் பயணித்த 30 வயதுடைய நபர் வைத்தியர் இல்லை என்பது தெரியவந்துள்ளதோடு, அவரிடமிருந்து 38 கிராம் கஞ்சாவும் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வைத்தியரைப் போன்று போலியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பயணித்தமை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று மருதானையில் கடற்படையினரைப் போன்று சீருடை அணிந்து முச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அவரும் கடற்படையினரைப் போன்று போலியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

30 வயதுடைய குறித்த சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஐஸ் , 610 மில்லி கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் மட்டக்குளி - கதிரான பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 120 கிராம் ஐஸ் மற்றும் 105 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 17 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் அம்பேகமுவ பொலிஸாருடன் இணைந்து அந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின்போது 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹதுட்டுவ பொலிஸாரினால் 9 கிராம் ஹெரோயின், 29 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் 25 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment