(எம்.ஆர்.எம்.வசீம்)
காஸ் விலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவுக்கும் காஸ் நிறுவனங்களுக்குமிடையில் இன்று இடம்பெற இருந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத காரணத்தினால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை உப குழு அங்கத்தவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், காஸ் நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் காஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் காஸ்விலை உயர்ந்துள்ளதை அடிப்படையாக் கொண்டே விலை அதிகரிக்க அனுமதி கோரி வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கை தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட அமைச்சரவை உப குழு ஆராய்ந்து பார்த்து, காஸ் நிறுவன பிரதானிகளுடன் கடந்த இரண்டு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது.
நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுள்ளதால், விலை அதிகரிப்பை ஒரு போதும் மேற்கொள்ள முடியாது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் சமர்ப்பிக்குமாறு எமது குழு தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரம் இது தொடர்பாக இன்று கலந்துரையாடி தீர்மானம் ஒன்றுக்கு வர இருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றையதினம் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.
அதனால் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக காஸ் நிறுவனங்கள் மற்றும் அமைச்சரவை உபகுழுவுக்கிடையிலான பேச்சுவார்த்தையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் திங்கட்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடொன்றுக்கு வர முயற்சிப்போம். இருந்தபோதும் தற்போதைக்கு காஸ் விலை அதிகரிக்கப்படாது என்றார்.
No comments:
Post a Comment