"எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" : அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை விடுத்துள்ள வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 17, 2021

"எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" : அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை விடுத்துள்ள வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்கள்

"எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இன்று (17.06.2021) மருதங்கேணியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதுடன் பாரம்பரியமாக சிறு தொழிலில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்காத வகையில், பிரதேசத்தின் பெரும்பாலானவர்களின் நலன்களின் அடிப்படையில் தொழில் முறைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இன்றைய கலந்துரையாடலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி வின்ஞ் மூலம் கரைவலைத் தொழிலில் ஈடுபடுதல் மற்றும் சுருக்கு வலைத் தொழில் மற்றும் கடலட்டை பிடித்தல் போன்ற சர்ச்சைக்குரிய தொழில் முறைகளில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு, அவசியமான நிபந்தனைகளுடன் அனுமதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாட்டின் ஏனைய சில பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழில் முறைகள் வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் தடை செய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான பாகுபாடுகள் ஒரே நாட்டினுள் இருக்கக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்ததுடன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருக்கின்ற தற்போதைய காலகட்டம் தமக்கான காலம் என்றும், இக்காலப் பகுதியில் தங்களுடைய வளத்தினை தாங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "நான் இந்தப் பிரதேசத்தினை சேர்ந்தவனாகவும் உங்களில் ஒருவனாகவும் இருக்கின்ற போதிலும், இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான அமைச்சராகவே இருக்கின்றேன். என்னுடைய அமைச்சு செயற்பாடுகள் இனம் மற்றும் பிரசேம் சார்ந்தவையாக இருக்க முடியாது.

எனினும், ஒவ்வொரு பிரதேசம் தொடர்பான தீர்மானங்களும், அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற பெரும்பாலானோரின் கருத்துக்களின் அடிப்படையிலாவையாகவே இருக்கும்.

காலியில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் காலியில் வாழுகின்ற பெரும்பாலான மக்களின் நலன் சார்ந்தவையாக இருக்கும். அதேபோன்று வடமாராட்சி கிழக்கில் மேற்கொள்ளும் தீர்மானங்கள், இந்தப் பிரதேசத்தின் பெரும்பாலானவர்களின் நலன் சார்ந்தவையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு தொழில் முறைகளையும் மேற்கொள்ள விரும்புகின்றவர்கள், அதுதொடர்பான கோரிக்கைகளை கடற்றொழில் உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்குமாறு கடற்றொழல் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவித்ததுடன், ஒவ்வொரு தொழில் முறைகள் தொடர்பாகவும் பிரதேச மக்களின் கருத்துக்களை அறிந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் உத்தியோகத்தர்களையும் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும், கடற்றொழில் உத்தியோகத்தர்களின் அறிக்கையை ஆராய்வதுடன், ஒவ்வொரு தொழில் முறைகளிலும் இருக்கும் சாதக பாதகங்களை துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதுவரை, அனுமதி இன்றி சுருக்கு வலைத் தொழிலில் ஈடுபடுதல், கரைவலைத் தொழிலுக்கு உழவு இயந்திரம் பயன்படுத்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், குலை போட்டு கணவாய் பிடித்தல், டைனமைற் பயன்படுத்தல், அனுமதியின்றி கடலட்டை பிடித்தல் போன்ற தொழில் முறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment