முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் 'குரு அபிமானி' தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மகளிர் , சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் , பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் இதன்போது ஆரம்பகால குழந்தை பருவ கல்வி குறித்த தேசிய கொள்கையை பிரதமருக்கு வழங்கினர்.
குரு அபிமானி தேசிய வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ இதன்போது மேற்படி கொடுப்பனவுகளை வழங்கினர்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சுபீட்சத்தின் முன்பள்ளி கட்டுமானத்திற்கான 25 இலட்சம் ரூபாய் மற்றும் 1500 முன்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 இலட்சம் ரூபாய் நிதி வழங்கலும் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது.
முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment