காத்திருக்கும் 6 இலட்சம் பேருக்கும் விரைவாக உரிய தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் - இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 3, 2021

காத்திருக்கும் 6 இலட்சம் பேருக்கும் விரைவாக உரிய தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் - இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

நா.தனுஜா

கொவிஷீல்ட் இரண்டாம் கட்டத் தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் 600,000 பேருக்கு இயலுமானவரை விரைவாக உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். உடனடியாகவும் முறையாகவும் ஆய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவது இதற்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்மானமாக அமையும் என்று இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாம் கட்டமாக கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்ற 100 பேருக்கு இரண்டாம் கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்கி இரு வாரங்களுக்குக் கண்காணிப்பதன் மூலம் இந்த நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.

'இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலைக் குறைத்தல்' என்ற தலைப்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்னவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மிகவும் அவசியமான நேரத்தில் 'நாட்டை முடக்கும்' (நாட்டில் ஒவ்வொரு இடங்களுக்கும் இடையிலான நகர்வை மட்டுப்படுத்தல்) அறிவிப்பை மேற்கொண்டதன் ஊடாக மிகப்பாரிய பேரழிவை எதிர்கொள்வதிலிருந்து இலங்கையை மீட்டெடுத்தமைக்காக ஜனாதிபதியாகிய உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.

நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய முடக்கம் ஒட்டு மொத்த கட்டமைப்பிலும் ஏற்படக்கூடிய முடக்கமாக மாறுவதும் இதனூடாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை மருத்துவ அமைப்பு உறுப்பினர்களின் ஒருமித்த கருத்திற்கு அமைவாக, இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் சில முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். 

இப்பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடலின்போது பேராசிரியர் நீலிகா மாலவிகே, பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் பேராசிரியர் காமினி மென்டிஸ் ஆகியோரும் பங்களிப்புச் செய்திருந்தார்கள்.

தற்போதுள்ள சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளின் இயலுமை தொடர்பில் கிளினிக் நிலையங்கள் மற்றும் ஆய்வுகூடங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டியுள்ளோம். அதன்படி பெருமளவிற்கு பிரதான வைத்தியசாலைகள் மற்றும் அவற்றின் அனைத்து வார்டுகளும் கொவிட்-19 தொற்று அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளைப் பரிசீலிப்பதற்கு ஏற்றவையாக இருக்கின்றன.

மேலும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 82 கட்டில்களுக்கு மேலதிகமாக 70 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சாதாரண அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை 500 இற்கும் அதிகமான நோயாளர்களுக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில் கொவிட்-19 நோயாளர்களால் வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளமை தெளிவாகின்றது. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பொன்று அடையாளங்காணப்பட்டு வரும் நிலையில் நாடு மீண்டும் திறக்கப்பட்டால், சுகாதார சேவைக் கட்டமைப்பு முழுமையாக செயலிழக்கும் நிலையேற்படும். அதன் காரணமாக மேலும் ஒரு வார காலத்திற்கேனும் முடக்கத்தை நீடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம். 

உணவுப்பொருள் விற்பனை நிலையங்களைத் திறந்து வைப்பதன் ஊடாக நீண்ட கால முடக்கத்தின் போது மக்கள் அவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்வதை இலகுபடுத்த முடியும்.

மேலும் முன்னுரிமை அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள், கொவிட்-19 கட்டுப்பாட்டில் பங்களிப்புச் செய்யும் முன்னரங்கப் பணியாளர்கள், பொலிஸார், முப்படையினர் உள்ளிட்ட தரப்பினருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைப் பெரிதும் வரவேற்கின்றோம்.

எனினும் இந்தத் தடுப்பூசி வழங்கல் செயற்திட்டம் உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்தத் திட்டத்தில் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 

எனவே மீண்டும் மீண்டும் நாட்டை முடக்குவதைத் தவிர்க்கக் கூடிய வகையில் இந்த வைரஸ் தொற்றினால் உயர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தரப்பினருக்கு முதலில் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்றவாறான திட்டத்தைத் தயாரிக்குமாறு பரிந்துரைக்கின்றோம்.

ஆய்வுகளின்படி முதலில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் அவர்களைத் தொடர்ந்து 30 - 60 வயதிற்கு இடைப்பட்டவர்களில் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது அவசியம் என்பது நிரூபணமாகியுள்ளது.

அதேவேளை இயலுமானவரை விரைவாக கொவிஷீல்ட் இரண்டாம் கட்டத் தடுப்பூசிக்காகக் காத்திருக்கும் 600,000 பேருக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். உடனடியாகவும் முறையாகவும் ஆய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஸ்புட்னிக் முதலாம் கட்டத் தடுப்பூசியை வழங்குவது இதற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்மாக அமையும் என்று நம்புகின்றோம்.

முதலாம் கட்டமாக கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்ற 100 பேருக்கு இரண்டாம் கட்டமாக ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்கி இருவாரங்களுக்குக் கண்காணிப்பதன் மூலம் இந்த நெருக்கடிக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad