அரசாங்கத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் கடிதம் : தீர்மானம் எடுப்பதிலிருந்து பிரதமர் விலகியுள்ளமை கவலையென்கிறார் அபயராம விகாராதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

அரசாங்கத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் கடிதம் : தீர்மானம் எடுப்பதிலிருந்து பிரதமர் விலகியுள்ளமை கவலையென்கிறார் அபயராம விகாராதிபதி

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளமை கவலைக்குரியது. நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தும் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அவதானம் செலுத்தாதுள்ளமை பொறுத்தமற்றது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையினை வியாபாரிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் அருவறுக்கத்தக்கதாக காணப்படுகிறது என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு. இவ்விடயத்தில் சுகாதார அமைச்சு ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படவில்லை.

நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5000 ஆயிரம் ரூபா நிவாரண நிதி தற்போது வழங்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது. அங்காடி விற்பனையாளர்கள் வழமைக்கும் மாறாக அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ஆகவே, இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் ஒழிப்பினை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்படும் தீர்மானங்களில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளமை கவலைக்குரியது. பிரதமர் இவ்விடயங்களுக்கு தலைமை தாங்குவது அவசியம் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு மத தலைவர்களுக்கு உண்டு அரசாங்கத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. தவறுகளை திருத்திக் கொண்டு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் இல்லாவிடின் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment