வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சியை 5 - 6 வீதம் வரையில் பேணுவதற்கு எதிர்பார்ப்பு : பங்களாதேஷிடம் நிதியை பெற வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சியை 5 - 6 வீதம் வரையில் பேணுவதற்கு எதிர்பார்ப்பு : பங்களாதேஷிடம் நிதியை பெற வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தாலும்கூட, தற்போது 'நியூ நோர்மல்' அடிப்படையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் அளவிற்கு பொதுமக்கள் இசைவாக்கமடைந்திருக்கிறார்கள். எனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமான கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையினால் பொருளாதாரத்திற்குப் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டபோதிலும், இவ்வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சியை 5 - 6 சதவீதம் வரையில் பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவர்களது நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு கடன் பெறுவது குறித்து இதுவரையில் அரசாங்கத்தினால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல், வெள்ளப் பெருக்கு, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கும் நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலொன்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அதில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷமன் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்ரநாத் அமரசேகர ஆகியோர் கலந்துகொண்டு தற்போதைய பொருளாதார நிலை குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கேள்வி இவ்வருட ஆரம்பத்தில் பொருளாதாரம் தொடர்பில் காணப்பட்ட எதிர்பார்ப்பும் அதன் தற்போதைய நிலையும் எத்தகையதாக இருக்கின்றது?

பதில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நாம் பதவியேற்றுக் கொண்டபோது உயர்வான எதிர்பார்ப்புக்களுடனேயே பணிகளை ஆரம்பித்தோம். குறிப்பாக கொள்கை அடிப்படையிலான மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் அவற்றினூடாக பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை வகுத்துக் கொள்வதென்பது பிரதான எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. அதன் மூலம் பொருளாதாரம் மிகவேகமாக முன்நோக்கிப் பயணிக்கும் என்றும் எதிர்பார்த்தோம்.

எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொருளாதாரம் குறித்த எமது எதிர்பார்ப்புக்களை வரையறுத்துக் கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது. 

குறிப்பாக பொருளாதாரத்துடன் தொடர்புடைய பொதுமக்களின் நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்டன. வைரஸ் பரவலின் முதல் காலரையாண்டில் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி கண்டது. எனினும் அதனை ஓரளவிற்கு மீட்டெடுத்த போதிலும், மீண்டும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் காரணமாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. அவ்வாறிருப்பினும்கூட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மொத்தத் தேசிய உற்பத்தியின் வீழ்ச்சியைக் ஓரளவிற்குக் கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை காரணமாக மீண்டும் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால் இவ்வருட முடிவில் 5 - 6 சதவீதம் வரையில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகள், அவர்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் காரணமாகப் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமா?

பதில் கொரோனா வைரஸ் பரவல், காலநிலை மாற்றங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பொன்று ஏற்படும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறிருப்பினும் கடந்த காலத்தில் பணவீக்க நிலையை 10 சதவீதத்திற்குள் பேண முடிந்தது. உணவுப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் அதிகரிப்பினும் உணவல்லாப் பணவீக்கம் நிலையான மட்டத்தில் பேணப்படும். எது எவ்வாறெனினும் 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தக் கேள்வியில் பெருமளவிற்கு மாற்றமேற்படாது என்றே கணிக்கப்படுகின்றது. ஆகவே நிரம்பலும் பண வீக்கமும் மாற்றமின்றிப் பேணப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக தற்போது இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக, உள்நாட்டு உணவுற்பத்திகள் அதிகரித்துள்ளன. இதனூடாகவும் பண வீக்கத்தை ஓரளவிற்குக் கட்டுப்படுத்த முடியும்.

கேள்வி அண்மைக் காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி மீது குறித்தளவிலான அழுத்தமொன்று காணப்படும் நிலையில், ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில் நாட்டிற்குள் வரும் அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்குக் கடந்த காலத்தில் நடவடிக்கை எடுத்தோம். ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அது தொடர்ந்தும் நிலையாகப் பேணப்படும் என்று உறுதியாகக் கூறுவது கடினமாகும். எதிர்வரும் காலங்களில் கொழும்பு துறைமுக நகரத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிக்கும்போது அந்நியச் செலாவணி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டுத் துறைசார் நடவடிக்கைகளில் எத்தகைய தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன?

பதில் ஒரு நாடென்பது உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணி, ஒன்றிணைந்து செயற்படுவது இயல்பானது என்பதுடன் அவசியமானதுமாகும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டன. 

குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் நாடு முழுமையாக முடக்கப்பட்டதுடன் எமது நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத் துறையில் பாரியளவு தாக்கங்கள் ஏற்பட்டன. சுற்றுலாத் துறை மீதான தாக்கங்கள் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

அதேவேளை தற்போது இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடு நடைமுறையிலிருப்பதனால் வர்த்தகப் பற்றாக்குறையை ஓரளவிற்கு சாதகமான மட்டத்தில் பேண முடியும் எனக் கருதுகின்றோம்.

கேள்வி தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் நாட்டில் தொடர்ந்தும் அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அதனால் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இவையிரண்டிற்கும் இடையில் எதனை நடைமுறைப்படுத்தலாம்?

பதில் உண்மையைக் கூறுவதானால், இவற்றில் ஒன்றை மாத்திரம் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இரண்டு பிரச்சினைகளுக்குமே தீர்வுகாண முடியாது. அதனால் இவையிரண்டிற்கும் இடையிலான, நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வொன்றை அடையாளங்காண வேண்டும். 

கடந்த 2020 ஆம் ஆண்டில் நாட்டை முழுமையாக முடக்கியதனால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனைத் தவிர்ப்பதற்காகவே இம்முறை முழுமையாக முடக்காமல் அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ஆகவே பொருளாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாத, பொதுமக்களின் சுகாதார நலன் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கும் பாதிப்பையேற்படுத்தாத செயற்திட்டமொன்றையே தற்போது நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

கேள்வி வெளிநாட்டுக் கையிருப்பை வலுப்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில் குறிப்பாக கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து கடனல்லாத, பணப்பரிமாற்ற அடிப்படையில் 1.5 பில்லியன் டொலர்கள் பெறப்பட்டன. அதே அடிப்படையில் இந்தியாவிடமிருந்தும் பங்களாதேஷிடமிருந்தும் நிதியைப் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இவற்றினூடாக எதிர்காலத்தில் நாட்டிற்குள் கடனல்லாத, நிதி உட்பாய்ச்சல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.

மேலும் பங்களாதேஷிடம் இவ்வாறான நிதியைப் பெறுவது குறித்து வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதுபற்றி விமர்சனங்களை முன்வைப்பதென்பது, கிராமங்களில் ஒருவரிடம் பிறிதொருவர் கடன் வாங்குவதை விமர்சிப்பது போன்று உள்ளது.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவர்களது நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு கடன் பெறுவது குறித்து இதுவரையில் அரசாங்கத்தினால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை.

கேள்வி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிநிலையை சமாளிப்பதற்கென அண்மைக் காலத்தில் வங்கிகளால் பொதுமக்களுக்கும் வணிகங்களுக்கும் பல்வேறு நிவாரண அடிப்படையிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. எனினும் அவற்றை வசூலிக்கும்பேர்து பின்பற்றப்படும் நடைமுறைகள் மக்களுக்கு மேலும் சுமையாக மாறியுள்ளதே?

பதில் வங்கிகளால் வழங்கப்பட்ட கடனுதவிகளை மீள வசூலித்தல் மற்றும் அதற்கான நிபந்தனைகள் தொடர்பில் மத்திய வங்கியினால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதனை மீறி இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் மத்திய வங்கிக்குப் பெருமளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறவில்லை. எனினும் அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் அதுகுறித்து முறைப்பாடு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment