ரிஷாத், ரியாஜின் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

ரிஷாத், ரியாஜின் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் தெரிவிப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக்கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், சி.ஐ.டி.யில் இருப்பின் அவற்றை ஒரு வாரத்தில் உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் அறிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது.

இம்மனுக்களில் முதலில் ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.

இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோனும் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.

இதன்போது மனுதாரர்கள் சார்பில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய பல ஆவணங்கள், சி.ஐ.டி.யின் பொறுப்பில் உள்ள நிலையில் அவற்றை நீதிமன்றில் பாரப்படுத்த உத்தரவொன்றினை விடுக்குமாறு கோரினார்.

எனினும் இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர், சி.ஐ.டி.யில் அவ்வாறான ஆவணங்கள் இருப்பின் அவற்றை ஒரு வாரத்துக்குள் மன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment