நிதி நெருக்கடிகளை சமாளிக்கவே 200 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை : வரலாற்றில் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்தளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கவில்லை - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

நிதி நெருக்கடிகளை சமாளிக்கவே 200 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை : வரலாற்றில் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்தளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கவில்லை - அமைச்சர் பந்துல

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

உலகளாவிய கொவிட் நெருக்கடியால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவே 200 பில்லியன் குறைநிரப்பு பிரேரணைக்கு அரசாங்கம் அங்கீகாரத்தை கோரியுள்ளது. வரலாற்றில் நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்தளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியதில்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை சபைக்கு சமர்ப்பிக்கப்படிருந்த 200 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ள நிதி அமைச்சால் குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுகிறது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இதுவரை ஏற்பட்டதில்லை.

கொவிட் நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் நிதிச் செலவு மற்றும் அதன் நிர்வாகம் என்பவை சவால் மிக்கதாக மாறியுள்ளது. என்றாலும் கொவிட் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவும் தொற்றாளர்களுக்கு உரிய சுகாதார வழிகாட்டல்களையும் சிகிச்சைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், அதற்கு சமாந்திரமாக அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோன்று தடுப்பூசி வேலைத்திட்டம் மற்றும் ஏனைய சுகாதார வேலைத்திட்டங்களும் முழு சுகாதார கட்டமைப்புக்கும் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் குடும்பங்களுக்கு நிவாரணம் தடையின்றி வழங்கப்படுகிறது.

பயணக் கட்டுப்பாடு காரணமாக வாழ்வாதாரத்தை இழக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணத்தை வழங்குவதும் அவசியமானதென அரசாங்கம் கண்டறிந்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடுகளை செய்வது அவசியமாகும்.

மேலும் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளின் பிரகாரம் அவசர மற்றும் இடர் நிலைகளின் போது தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் கீழ் மீண்டெழும் செலவினங்களுக்கான கையிருப்பாக 30 பில்லியனும் மூலதன செலவுக்காக 20 பில்லியன் என்ற அடிப்படையில் 50 பில்லியனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இருந்தபோதும் தேவைகளின் பிரகாரம் குறித்த நிதியில் 43 பில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதனால் கையிருப்பில் உள்ள நிதியானது எதிர்காலத்தில் சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக அமையாது. 

அதனால், எதிர்காலத்தில் ஏற்படும் நிதி ரீதியான சவால்களை எதிர்கொள்ள மீண்டெழும் செலவினங்களுக்காக 133 பில்லியன் நிதியும் மூலதனச் செலவாக 69 பில்லியனுமாக 200 பில்லியன் வரையான நிதியை தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் கீழ் ஏற்பாடு செய்யும் குறைநிரப்பு பிரேரணை நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திட்டமிட்டபடி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவைகளை முன்னெடுக்க முடியாது போயுள்ளமையால் 2021ஆம் ஆண்டுக்கான கடன் ஏற்பாடுகளில் மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை இதுவரை ஏற்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment