கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் விரைந்து செயற்பட 15 நிறுவனங்கள் தயார் நிலையில் - கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் விரைந்து செயற்பட 15 நிறுவனங்கள் தயார் நிலையில் - கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர்

எம்.மனோசித்ரா

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன் மேலும் 15 நிறுவனங்கள் தயார் நிலையிலுள்ளன. மேலும் எண்ணெய் கசிவு தொடர்பான விசேட சர்வதேச குழு மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புக்களும் பெற்றுக் கொள்ளப்படும் என்று கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹன்டாபுர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கப்பலில் எண்ணெய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் உள்ளது. எனினும் இலங்கை கடல் சூழலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கப்பலின் கேப்டனுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏதேனுமொரு வகையில் எண்ணெய் கசிவு காணப்பட்டால் அதனை தடுப்பதற்கும் அல்லது வேறொரு கொல்கலன்களுக்கு அதனை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 3 மணித்தியாலங்களுக்கும் கப்பலின் தன்மை உள்ளிட்ட நிலைவரம் தொடர்பில் தகவல்களை தெரிவிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபையும் மேலும் 15 நிறுவனங்களுடன் இணைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளது.

மேலும் எண்ணெய் கசிவு தொடர்பான விசேட சர்வதேச குழு நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த குழுவின் முழுமையான ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இந்தியாவின் கரையோர பாதுகாப்பு கப்பல்களும் இந்த பணியில் எம்முடன் இணைந்துள்ளன என்றார்.

No comments:

Post a Comment