சுகாதாரத்துறைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியிருக்கிறது : நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டமற்ற அரசராக கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடலாம் - பாலித ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

சுகாதாரத்துறைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியிருக்கிறது : நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டமற்ற அரசராக கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடலாம் - பாலித ரங்கே பண்டார

(நா.தனுஜா)

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சுகாதாரத்துறைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது. அதற்கான எதிர்வினைகளை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் தயாராகும் வேளையில், அவர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே சுகாதார சேவையுடன் தொடர்புடையதும் அதனை வலுப்படுத்துவதற்கு அவசியமானதுமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் மேலும் கூறியிருப்பதாவது இந்த நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டமற்ற அரசராக கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிட முடியும். அவருடைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் நியாயமற்றத்தன்மை மேலோங்கியுள்ளது. ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் மனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் முழுவதுமாக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் சூழலும் வெகுவாக மாசடைந்துள்ளது.

அன்றாடம் தொழில் செய்து கூலி பெறுபவர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இவற்றுக்கு மத்தியில் அடிக்கடி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுகின்ற விளையாட்டை ஆட்சியாளர் ஆரம்பித்திருக்கின்றார். அதன்படி சுகாதார சேவையுடன் தொடர்புடையதும் அதனை வலுப்படுத்துவதற்கு அவசியமானதுமான சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

மருத்துவ அதிகாரியிலிருந்து கீழ்மட்ட சுகாதார சேவைப்பணியாளர் வரை அனைவரும் தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு அவசியமான போதியளவான சுகாதாரப் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவில்லை. சுகாதாரப் பணியாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

விசேட கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை. இது குறித்து சுகாதார சேவைப்பணியாளர்கள் கடந்த காலத்திலிருந்தே தொடர்ச்சியாகக் கூறிவருகின்றனர். எனினும் அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை.

அதன்படி இன்றையதினம் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அவர்கள் தயாராகும் வேளையில், அந்த சேவைகளை அத்தியாவசியமாக்குகின்ற வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. சுகாதார சேவைப் பணியாளர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, அரச ஊழியர்களை அச்சுறுத்தும் விதமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை அரசாங்கத்தை முறையாக நடத்தமுடியாவிட்டால், பதவி விலகிவிட்டு அரசாங்கத்தை நடத்தும் இயலுமை உள்ளவர்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment