Sinopharm இரண்டாம் தொகுதி தடுப்பூசிகளை இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

Sinopharm இரண்டாம் தொகுதி தடுப்பூசிகளை இன்று முதல் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய பணிப்புரை

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்று (26) முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.

அந்த வகையில் சுகாதார துறைகளின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் சில மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

5 இலட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL869 விமானம் இன்று (26) அதிகாலை 12.05 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஹொன் (Qi Zhen Hon) இனால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இந்த இரண்டாவது தடுப்பூசிகள் தொகுதி இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப் பெற்றுள்ளது. 

அரசாங்கம் கொள்வனவு செய்வதற்காக கோரியுள்ள மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை இன்னுமொரு மாதத்திற்குள் வழங்கவும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பயனாக Sinovac தடுப்பூசிகளை இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, டீ.வீ. சானக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment