எரியும் கொள்கலன் கப்பல் ! காயமடைந்த ஊழியருக்கு கொரோனா ! மீன்பிடிக்க வேண்டாம் ! நச்சு இரசாயனப் பொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

எரியும் கொள்கலன் கப்பல் ! காயமடைந்த ஊழியருக்கு கொரோனா ! மீன்பிடிக்க வேண்டாம் ! நச்சு இரசாயனப் பொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் !

இரசாயனப் பொருட்களை ஏற்றியவாறு கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான கப்பலில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தை அடுத்து, அதிலிருந்து வீழ்ந்த கொள்கலன்கள் மற்றும் பொதிகள் என்பன நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் கரையொதுங்கி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும்கூட, அப்பகுதி மக்கள் கரையொதுங்கியிருக்கும் பொதிகளை எடுத்துச் செல்வதில் ஆர்வம் காண்பித்துள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேற்குப் பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கொள்கலன் கப்பலில் கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்து கடந்த 22 ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கடற்படையினரால் கூறப்பட்டது. எனினும் தற்போது கப்பில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக தீப்பரவல் அதிகரித்துள்ளதுடன் இப்போது கப்பலின் குழுவினர் மற்றும் மீட்பு நிறுவனத்தின் நிபுணர்கள் குறித்த கப்பலிலிருந்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வேண்டுகோளின்பேரில், தீயணைப்புத் திறன்களைக் கொண்ட இந்தியக் கடலோர காவல்படையின் கடல்மாசு தடுப்பு கப்பலொன்றும் தீயணைப்புப் பணிகளில் இணைந்துள்ளது.

தீயணைப்புக் கருவிகள் மற்றும் எண்ணெய் சேதத்தைத் தடுக்கக்கூடிய இரசாயனங்கள் கொண்ட டோர்னியர் விமானமும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடல் அலைகளால் கப்பல் சற்று வலப்புறம் சாய்ந்துள்ளது. இதனால் கப்பலில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் சில கடலில் விழுந்ததுடன் மேலும் சில கொள்கலன்கள் கடலில் மூழ்கிவிட்டன.

ஆகையினால் இப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கப்பலில் இருந்து வீழ்ந்த சில கொள்கலன்கள் மற்றும் எரியுண்ட கப்பலின் சிதைவுகள் என்பன நீர்கொழும்பை அண்மித்த ஜா-எல, கபுகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்பிராந்தியங்களில் கரையொதுங்கியுள்ளன.

அத்தோடு கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெயும் கடலில் கலந்துள்ளது.

வத்தளை, ப்ரீதிபுர கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு கடற்கரை வரையான கடற்பகுதியில் சுமார் 9 கிலோமீற்றர் வரையான தூரத்திற்கு இந்தச் சிதைவுகள் பரவியிருப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை கரையொதுங்கியுள்ள கொள்கலன்கள் மற்றும் சிதைவுகளில் நச்சு இரசாயனப் பொருட்கள் இருக்கலாம் எனச் சந்தேகிப்பதால், அவற்றைத் தொடுவதைத் தவிர்க்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களைக் கோரியுள்ளது.

எனினும் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும், கரையொதுங்கியுள்ள பொதிகளை அங்குள்ள மக்கள் காவிச்செல்வதுடன் அக்கடற்கரைப் பகுதியில் பலர் கூடியிருக்கின்றனர்.

அத்தோடு அக்கப்பலின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment