எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கெப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கெப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது

(எம்.மனோசித்ரா)

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சூழல் மாசு தொடர்பில் கொழும்பு துறைமுக விசேட பொலிஸ் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு இது குறித்து கப்பலில் கெப்டன் உள்ளிட்ட குழுவினரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலும், இதனால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் மாசு தொடர்பிலும் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதி ஆணையாளர் நாயகத்தினால் இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து துறைமுக பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த கடற்பிரதேசத்தின் நீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகள் அரச இரசாயன பரிசோதனை அதிகாரிக்கு கடந்த 25 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கப்பலின் பணிக்குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய இன்றுடன் அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைகிறது.

எனவே நாளை திங்கட்கிழமை துறைமுக பொலிஸாரால் குறித்த கப்பலின் கெப்டன் உள்ளிட்ட பணிக்குழுவினரிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இக்கப்பலில் கெப்டன் உள்ளிட்ட 25 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து தொடர்பிலும் அதனால் ஏற்பட்டுள்ள சூழல் மாசு தொடர்பிலும் கொழும்பு துறைமுக விசேட பொலிஸ் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment