ஜூன், ஜூலையில் டெங்கு நோய் தீவிரமடையும், வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்பட வேண்டாம் - வைத்தியர் இந்திக வீரசிங்க - News View

Breaking

Post Top Ad

Monday, May 31, 2021

ஜூன், ஜூலையில் டெங்கு நோய் தீவிரமடையும், வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்பட வேண்டாம் - வைத்தியர் இந்திக வீரசிங்க

(எம்.மனோசித்ரா)

டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டுமே வைரஸினால் பரவும் நோயாகும். இவற்றின் முதற்கட்ட அறிகுறியாக காய்ச்சல் ஏற்படும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் டெங்கு நோய் தீவிரமடையும் காலகட்டம் என்பதால் இவ்வாறான அறிகுறிகள் தென்படுபவர்கள் தாமதமின்றி வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரண்டுமே வைரஸினால் பரவும் நோயாகும். எனினும் இவ் இரு நோய்களிலும் வேறுபாடுகள் உள்ளன.

டெங்கு நோயாளர் ஒருவரிடமிருந்து பிரிதொருவருக்கு பரவுவதற்கு இடைநிலை காரணியொன்று தேவைப்படுகிறது. அந்த காரணி நுளம்பாகும். ஆனால் கொவிட் தொற்று அவ்வாறானதல்ல. எமது நகர்வுகள் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே கொவிட் தொற்று பரவுகின்றது.

எனினும் டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரு நோய்களின் போதும் ஆரம்ப கட்ட அறிகுறியாக காய்ச்சல் ஏற்படும். அத்தோடு கொவிட் தொற்றாளர்களுக்கு சுவாச தொகுதியுடன் தொடர்புடைய அறிகுறிகள் மேலதிகமாக தென்படும். எவ்வாறிருப்பினும் இவ்வாறான அறிகுறிகள் தென்படும் போது என்ன நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துகின்றோம்.

ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்பிணிகள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு நோய்க்கு உள்ளானால் அது பாரதூரமானதாகும். இவர்கள் மிகத் துரிதமாக வைத்தியசாலைகளுக்குச் செல்ல வேண்டியது அத்தியாவசியமானதாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் வைத்தியசாலைக்கு செல்ல அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது.

தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட சகல வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்று தவிர ஏனைய சகல நோய்களுக்கு சிகிச்சையளிப்பது இடைநிறுத்தப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad